வரலாற்று பக்கங்களில் இனவாத சிந்தனையை புகுத்தும் சரத் வீரசேகரவை வன்மையாக கண்டிப்பதுடன் சில வரலாற்றை கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறோம் என சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பின் நிரந்தர உறுப்பினரான பாலசந்திரன் வினோத் அனுப்பி வைத்துள்ள, குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது ,
இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை சிவ வழிபாடும் கிடையாது என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் 22ம் திகதி உரையாற்றிய போது தெரிவித்திருந்தமை மிகவும் கண்டனத்துக்குரியது.
எமது கண்டனத்தையும் பதிவு செய்வதுடன் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லவும் “சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு” அர்ப்பணிப்புடன் செயல்படும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தன்னுடைய ஆட்சி காலத்தில் (2020-07-18), இராவணன் உலகின் முதலாவது விமானி என்பதை அங்கிகரிக்குமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது அத்துடன் இராவணன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் திரட்டுவதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது என்பதை அக் கட்சியில் இருந்து கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்தத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றிய சரத் வீரசேகர தெரியாமல் இருப்பது கேலிக்கூத்தானா விடையமாகும்.
வீரசேகர அங்கத்தவராக இருக்கும் கட்சியே, இராவணனை முதல் விமானி என்ற கோரிக்கையை உலக அரங்கில் முன்னுறுத்தியுள்ள பொழுது ஒரு உறுப்பினராக அதனை அறியாமல் போனதற்கு அவரது இனவாத புத்தியே காரணமாக இருக்க முடியும். இராவணனிடம் இருந்து விபீஷணன் ஆட்சியை எடுத்துக்கொண்டதற்கான கல்வெட்டு இன்றளவும் களனி விகாரையில் சிற்பமாக வடிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருவதையும் ஒரு சிறந்த பொளத்தனாக அவர் அறியாமல் போனதற்கும் இனவாத புத்தி ஒன்றே காரணமாக இருக்க முடியும். சரத் வீரசேகர ஒரு சிறந்த பொளத்தர் இல்லை என்பதற்கும் இதுவே சான்றாகும்..
சிங்கள கலாச்சாரத்தை மறுசீரமைப்பு செய்த “குமாரதுங்க முனிதாச” அவர்கள் கூட இராவணன் என்பவர் இருந்தார் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளமையை அவருக்கும் அவரை போன்ற இனவாதிகளுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். 1941இல் அவர் உருவாக்கிய “ஹெல ஹவுலா (Hela Havula)” எனும் இலக்கிய அமைப்பினூடாக ராவணனை சிங்கள மாவீரனாகக் அடையாளப்படுத்தும் முயற்சி இடம்பெற்றது. அவ் இயக்கத்தின் தற்போதைய தலைவரான “அரிசன் அகுபுது” எழுதிய “Sakvithi Ravana” புத்தகத்தில் இராவணன் என்பவன் ” கிமு 2554 முதல் 2517 வரை இலங்கையை ஆண்டதாகக் கூறுகிறார்” என்பதையும் அவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.
சிவன் இராவண தொடர்புகள் என்பது உலகம் முழுவதிலும் பதியப்பட்டுள்ள வரலாறாகும். இந்திய வரலாற்று ஏடுகளில் ஏராளமான பக்கங்கள் “சிவன்-இராவணன்” தொடர்புகளை சான்றுகளாக அடையாளப்படுத்தி வைத்துள்ளது. வரலாறுகளை அறியாத சரத் வீரசேகர அவர்கள் இவை தொடர்பான தரவுகளை தேடி அறிய கேட்டுக்கொள்கிறோம். வரலாறுகளை படிக்க விரும்பும் இல்லை என்றால் “பெளத்தத்தை” படிக்கவும் அல்லது இனவாத சிந்தனைக்கு முன்னோடிகளான “Kumaratunga Munidasa, Arisen Ahubudu” போன்றவர்கள் எழுதிய சான்றுகளையாவது படித்து “இராவணனை” அறிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான நந்தக மதுரங்க கலுகம்பிட்டிய (Nandaka Maduranga Kalugampitiya) அவர்கள், ராவணனை சிங்களச் சின்னமாகப் கூறுவதற்கு எதிராக கேள்வி எழுப்பியதுடன் அதனை தவறு என்றும் 2015ம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரையின் மூலம் நிறுவியுள்ளார் என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.
தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார இடர்பாடுகளில் இருந்து மீட்சி பெறுவதற்கான அரசியலை முன்னெடுப்பதற்கு ஒரு தேசப்பற்றுள்ள இலங்கையராக முயலுங்கள் என கேட்டுக்கொள்கிறோம். குறுகிய இனவாத சிந்தனையின் மூலம் அழகிய எமது நாட்டை நாசமாக்க முயலும் பயங்கரவாத செயல்பாடுகளை சரத் வீரசேகர அவர்கள் நிறுத்தவேண்டும் எனவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.