யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கைத்தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் 21 வயதான இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயிருந்த நிலையில் அது தொடர்பில் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் 21 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது குறித்த இளைஞனிடம் இருந்து 21 கையடக்க தொலைபேசிகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
குறித்த தொலைபேசிகள் வைத்திய சாலையில் திருடப்பட்டவை எனவும் , வைத்திய சாலையில் தொலைபேசிகளை திருட்டுக்கொடுத்தவர்கள் யாழ்ப்பாண காவல்நிலையத்திற்கு வந்து தொலைபேசிகளை அடையாளம் காண முடியும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.