உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 18 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு இன்று (30) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்படி வழக்கானது இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி ஸஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் முஹமட் அக்ரம் உட்பட சட்டத்தரணிகள் குழுவினர் முன்னிலையாகி இருந்தனர்.
இன்றைய விசாரணையின் போது மன்றில் அரச சட்டவாதி நெறிப்படுத்தலுடன் ஸஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டு பிரதிவாதியின் சட்டத்தரணிகளினால் நீண்ட நேர சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் ஸஹ்ரானின் மனைவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அது தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
இதனையடுத்து மீண்டும் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 திகதிக்கு குறித்த வழக்கு மறுதவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.