தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அண்மைக்கால புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பில் சமூகவலைத்தளங்களில் பிரசுரிக்கப்படும் கருத்துக்களை கூர்ந்து கவனித்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது.என்னவெனில், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண்டிக்க முடியாதிருப்பதன் விளைவுதான் இது போன்ற சீரழிவுகள் என்ற தொனிப்பட பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள். கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள், சட்டவாளர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உட்பட பலதரப்பட்டவர்கள் அவ்வாறான கருத்துக்களைக் கொண்டிருப்பதாகத தெரிகிறது.ஆசிரியரின் கையில் இருந்த பிரம்பு பறிக்கப்பட்டதால்தான் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் பாடசாலை மட்டத்துக்கு பரவியுள்ளன என்று ஒரு பகுதியினர் நம்புகிறார்கள்.கல்வியதிகாரிகளுக்கும் அதிபர் ஆசிரியர்களுக்கும் வகுப்பெடுக்கும் உயரதிகாரிகள் மாணவர்களை தண்டிக்கக்கூடாது என்று கூறிவிட்டு இப்பொழுது போதைப்பொருள் பாவனை தொடர்பான புள்ளி விபரங்களை ஒப்புவிக்கிறார்கள் என்று வேறொரு குறிப்பு கூறுகிறது. இக்கருத்துக்கள் எல்லாமே தொகுப்பாக கூறவருவது ஒரு விடயத்தைத்தான். பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பிள்ளைகளைக் கடுமையாகத் தண்டித்தால் இதுபோன்ற விடயங்களை கட்டுப்படுத்தலாம் என்பதுதான்.
பாடசாலைகளில் மாணவர்கள்மீது உடல்ரீதியாக அல்லது உளரீதியாக வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் 17ஆம் இலக்க சுற்றுநிருபம் 2005ஆம் ஆண்டு கல்வியமைச்சால் வெளியிடப்பட்டது. அப்பொழுது கல்வியமைச்சின் செயலாளராக கலாநிதி.தாரா டி மெல் இருந்தார்.அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 23ஆம் இலக்கச் சட்டத்தின்படி நீதிமன்றங்களில் சரீரத் தண்டனைகள் நிறுத்தப்பட்டதன் விளைவே மேற்படி சுற்றுநிருபம் என்று கூறப்படுகிறது.மேற்படி சுற்றுநிருபமானது 2016ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 12ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் மீள வலியுறுத்தப்படுகிறது.இச்சுற்றுநிருபமானது ஆசிரியர்களின் கைகளைக் கட்டிப்போடுகிறது என்ற ஒரு விமர்சனம் ஆசிரியர் சமூகத்தின் மத்தியிலும் ஏன் பெற்றோர் மத்தியிலும்கூட உண்டு.
கண்டிப்பான ஆசிரியரே நல்லாசிரியர் என்று அபிப்பிராயம் தமிழ்மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருக்கிறது.கண்டிப்பான ஆசிரியர்களே வெற்றி பெற்ற ஆசிரியர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.நாட்டில் உள்ள கல்வி முறையானது பரீட்சையை மையமாகக் கொண்டது.பரீட்சை மையக் கல்வியைப் பொறுத்தவரை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பவரே கெட்டிக்கார ஆசிரியர். அந்த சிறந்த பெறுபேறுகளை அவர் எப்படியும் பெற்றுக் கொடுக்கலாம் என்று பெரும்பாலான பெற்றோர் கருதுகிறார்கள்.இதனால் சிறந்த கல்விப் பெறுபேறுகளுக்காக அதிகம் பலியிடப்படுவது மனித உரிமைகள் என்பதனை பெரும்பாலான பெற்றோர் பொருட்படுத்துவதில்லை. அதனால் தேசியமட்ட பரீட்சைகளை நோக்கி மாணவர்களை தயார்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன.
இப்படிப்பட்டதோர் கல்விச்சூழலில் தண்டனை நிறுத்தப்பட்டதால் பிள்ளைகள் மத்தியில் போதைப்பொருள் அதிகரிக்கிறது என்ற கூற்று மேலோட்டமாகப் பார்த்தால் சரியாகவே தோன்றும்.சில நாட்களுக்கு முன் ஆந்திராவில் கஞ்சா பாவிக்கும் தனது 15 வயது மகனை அவருடைய தாயார் வீட்டில் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து அவருடைய கண்களுக்குள் மிளகாய்தூளைத் தூவினார்.இது ஊடகங்களில் பரவலாக வெளிவந்தது. இது போன்ற தண்டனைகள்மூலம்தான் மாணவர்களை மட்டுமல்ல பாடசாலை நீங்கிய இளையவர்களையும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்தையும் கட்டுப்படுத்தலாம் என்ற ஒரு கருத்து பரவலாக உண்டு.
ஆனால் தனிய தண்டனைகளால் மட்டும் இந்த விவகாரத்தை கையாள முடியாது.ஏனெனில் பிரச்சினையின் வேர்கள் மிகஆழமானவை.அந்த வேர்களைத் தேடிப்போனால் யாரைத் தண்டிப்பது என்ற கேள்வி எழும். நுகர்வோரை தண்டிப்பதா?அல்லது விற்பனையாளர்களை தண்டிப்பதா?அல்லது திட்டமிட்டு மாணவர்களைக் குறிவைத்து போதைப்பொருள் வலைப்பின்னலைக் கட்டியெழுப்பும் அரசியல் உள்நோக்கமுடைய சக்திகளைத் தண்டிப்பதா? யாரை தண்டிப்பது?
இப்பிரச்சினையின் சமூகப்பொருளாதார,அரசியல் பின்னணி மிகஆழமானது. 2009க்குப் பின்னரான தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, முதலாவதாக தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று நிலவுகிறது.
இரண்டாவதாக உலகில் அதிகம் படைமயமாக்கப்பட்ட ஒரு அரசியல் ராணுவ சூழலுக்குள் தமிழ்ச்சமூகம் வாழ்கிறது. நாட்டின் படைக்கட்டமைப்பின் மொத்த தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பகுதி வடக்கு கிழக்கில் காணப்படுவதாக ஒரு புள்ளிவிபரம் உண்டு.
மூன்றாவதாக மேற்சொன்ன ராணுவ மயப்பட்ட சூழல் காரணமாக படைத்துறை புலனாய்வாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ்ச்சமூகம் காணப்படுவது.
நாலாவதாக ஆயுத மோதல்களுக்கு முன்னிருந்த ஒரு சமூகக் கட்டமைப்பு குலைந்து போய்விட்டது.ஆயுதப் போராட்டம் புதிய விழுமியங்களையும் ஒரு புதிய சமூக ஒழுங்கையும் உருவாக்க முற்பட்டது.2009ல் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில்,ஏற்கனவே இருந்த சமூகக் கட்டமைப்பும் குலைந்து இடையில் ஆயுதப் போராட்டம் கொண்டு வந்த புதிய ஒழுங்கும் குலைந்து இப்பொழுது ஏறக்குறைய எல்லாச் சமூகக் கட்டமைப்புகளும் குலைந்துபோன ஒரு நிலை காணப்படுகிறது. இவ்வாறான ஒரு பின்னணியில் விழுமியங்களை மீழுருவாக்க வேண்டிய ஒரு சமூகமாக தமிழ்ச்சமூகம் மாறியிருக்கிறது.
ஐந்தாவது உலகளாவிய தகவல் தொழில்நுட்பப் பெருக்கத்தின் விளைவாக இளைய தலைமுறை கைபேசி செயலிகளின் கைதியாக மாறியிருப்பது.
மேற்கண்ட ஐந்து காரணங்களையும் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும்.தமிழ்மக்களைத் தொடர்ந்தும் அரசியல்ரீதியாக தோற்கடிக்க விரும்பும் சக்திகள் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பதாகவும் போதைப்பொருள் வலைப்பின்னலை அவர்களே நிர்வகிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டை தமிழ் அரசியல்வாதிகள் ஏன் முன்வைத்து வருகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்
எனவே போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது என்பது தனிய தண்டனைகளால் மட்டும் சாத்தியமான ஒன்று அல்ல.அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமைய வேண்டும்.
முதலாவதாக,சமூகப் பிரதிநிதிகள்,மக்கள் பிரதிநிதிகள்,மருத்துவர்கள் செயற்பாட்டாளர்கள்,மதப் பெரியோர்கள்,புத்திஜீவிகள்,கலைஞர்கள், ஊடகங்கள் என்று எல்லா தரப்புக்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டுச் செயற்பாடாக அதை முன்னெடுக்க வேண்டும். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் அல்லது செயற்பாட்டாளர்கள் தலைமைதாங்க வேண்டும். ஆனால் அவ்வாறான ஒரு தலைமைத்துவம் இல்லாத வெற்றிடத்தில்தான் போதைப்பொருள் பாவனை பாடசாலைகள் வரை வந்துவிட்டது.போதைபொருள் பாவனை மட்டுமல்ல வாள் வெட்டுக் கலாச்சாரத்தின் பின்னால் உள்ள உளவியலைத் தீர்மானிக்கும் அம்சங்களும் மேற்கண்டவைதான்.
இளம் வயதினரின் வேகங்களுக்கு ஈடுகொடுத்து,அவர்கள் மத்தியில் இலட்சியங்களை விதைத்து, அவர்களுடைய சாகச உணர்வுகளைச் சரியான திசையில் திருப்பி,விழுமியங்களை மீழுருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மதகுருகளுக்கும் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் உண்டு. ஆனால் அக்கூட்டுப் பொறுப்பை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?
பாடசாலைகளில் தண்டனை நீக்கப்பட்டதை குறித்து முறையிடுகிறோம். ஆனால் ஒரு காலம் எமது பிள்ளைகள் தனியாக பள்ளிக்கூடங்களுக்கு போனார்கள்.டியூட்டரிகளுக்கு போனார்கள்.பெற்றோர் அவர்களை காவிச் செல்லும் ஒரு நிலைமை இருக்கவில்லை.ஆனால் இப்பொழுது எல்லா அம்மாக்களும் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கிறார்கள்.அவர்கள் பிள்ளைகளை பூனை குட்டியைக் காவுவது போல இரவும் பகலும் காவுகிறார்கள்.ஏன் காவுகிறார்கள்?பிள்ளைகளை என் தனியாக விட முடிவதில்லை?
ஒரு பாடத்துக்கு இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்களிடம் பிள்ளை படிக்கிறது. அவ்வாறு படிப்பதற்கே நாள் போதாது.இது சுயகற்றலை பாதிக்காதா?அப்படிப் படித்து மேலெழுந்த பிள்ளை என்னவாய் வருகிறது?கல்வி பற்றிய தமிழ்ச்சமூகத்தின் அளவுகோல்கள் சரியானவைகளா?இந்த கல்விமுறைக்கூடாக உருவாக்கப்பட்ட ஆளுமைகள் எப்படிப்பட்டவை? இதைக் குறித்த ஒரு சரியான மீளாய்வு தமிழ்ச் சமூகத்திடம் உண்டா? இல்லை.கல்வி தொடர்பாகவும் விழுமியங்களை மீழுருவாக்குவது தொடர்பாகவும்,சமூகத்தை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பாகவும் கூட்டுத்திட்டங்கள் வகுக்கப்படவில்லை.அவற்றை வகுப்பதற்கான அதிகாரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு 13 ஆண்டுகளை கடந்துவந்து விட்டோம்.நாங்களாக சுயகவசங்களை உருவாக்க தவறிவிட்டோம்.அந்த வெற்றிடத்தில்தான் போதைப்பொருளும் வாள்களும் நுளைகின்றன.
எனவே பிரச்சினயின் வேர்களைத் தேடிப்போனால் முழுச்சமூகமும் அதன் கூட்டுப்பொறுப்பை இழந்து விட்டதைக் காணலாம். அண்மையில் எரிபொருள் வரிசைகளில் நின்றபோது நாங்கள் ஒரு சமூகமாகத் தோல்வியடைந்தமை தெரியவில்லையா? உங்களுடைய பிள்ளைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு வெளியாள் போதைப்பொருளை,வாளைக் கொடுக்கிறான் என்றால் உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ ஒரு இடைவெளி இருக்கிறது என்று பொருள்.உங்களுக்கும் பிள்ளைக்கும் இடையே எங்கேயோ தொடர்பாடல் அறுந்துவிட்டது என்று பொருள்.நீங்கள் பிள்ளையோடு மேலும் கூடுதலாக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கிறது என்று பொருள்.பிள்ளைகளை இரவு பகலாக வகுப்புகளுக்கு காவி செல்கிறீர்கள்.ஆனால் பிள்ளைகளோடு மனம் விட்டு கதைக்கின்றீர்களா?
பூனை குட்டியைக் காவுவது போல பிள்ளைகளை காவுகிறோம். சிறந்த கல்விப் பெறுபேறுக்காக மனித உரிமைகளைப் பலிகொடுக்கத் தயாராக இருக்கிறோம்.அந்தக்கல்விப் பெறுபேறுகளின் விளைவாக நாங்கள் உருவாக்கிய ஆளுமைகள் எத்தகையவை என்ற கேள்வியை எப்பொழுதாவது எங்களை நோக்கி கேட்டிருக்கிறோமா?
இதுதான் பிரச்சினை.ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தை மீளக்கட்டியெழுப்ப அரசியல்வாதிகளால் முடியவில்லை.சமூகச் செயற்பாட்டாளர்களால் முடியவில்லை, சமயப் பெரியார்களால் முடியவில்லை, புத்திஜீவிகள்,படைப்பாளிகள், ஊடகங்களால் முடியவில்லை.
போதைப்பொருளிலிருந்து பிள்ளைகளை விடுவிப்பதென்றால் புனர்வாழ்வும் மட்டும் போதாது. தண்டனைகளால் பலன் இல்லை. மாறாக சமூகத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். விழுமியங்களை மீழுருவாக்க வேண்டும்.இளையோர் பிரமிப்போடு பார்க்கும் முன்னுதாரணம் மிக்க தலைவர்கள் மேலெழ வேண்டும்.திரைப்பட நாயகர்களையும் சண்டியர்களையும் முன்னுதாரணமாகக் கொள்ளும் வெற்றிடம் ஏன் ஏற்பட்டது?எனவே இளையோரை இலட்சியப்பற்று மிக்கவர்களாகவும்,உன்னதமான சமூகக் குறிக்கோளை நோக்கி எய்யப்பட்ட அம்புகளாகவும் மாற்றுவதற்கு தனியாக ஆசிரியர்களால் மட்டும் முடியாது.மருத்துவர்களால் மட்டும் முடியாது. உளவளத் துணையாளர்களால் மட்டும் முடியாது.புனர்வாழ்வு நிலையங்களால் மட்டும் முடியாது. அது ஒரு கூட்டுப் பொறுப்பு.
ஜெனிவாவில் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் ஒரு மக்கள்கூட்டமானது,சமூகச்சீரழிவுகள் பொறுத்து தனக்குள்ள கூட்டுப் பொறுப்பையும் உணர வேண்டும் கீழிருந்து மேல் நோக்கிய சுய பாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டும்.