போதை பொருள் வாங்க வருவோரிடம் பணம் இல்லாத போது அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் , கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை அடகாக எடுத்துக்கொண்டு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதை வியாபாரிகள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் போதை வியாபாரத்தில் ஈடுபடும் வியபாரிகள் தொடர்பிலான இரகசிய தகவல் மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கபெற்றமையை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த புலனாய்வு பிரிவினர் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 கிராம் 270 மில்லி கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை ,அவர்களிடம் போதைப்பொருளை வாங்க வருவோர் பண பற்றாக்குறை ஏற்பட்டால் , தமது கையடக்க தொலைபேசிகள் , மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடகாக வைத்து போதை பொருளை வாங்கி செல்வார்கள் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் போதைப்பொருள் வாங்குவதற்காக சந்தேக நபர்களிடம் அடகாக ஒப்படைக்கப்பட்ட 07 கையடக்க தொலைபேசிகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் பெறுமதியான நவீன ரக மோட்டார் சைக்கிள் என்பனவும் , காவல்துறை யினரினால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் யாழ்ப்பாண காவல நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.