யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் மின் சாதன விற்பனையாளர்கள் போன்று நடமாடி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வியங்காட்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மேலும் சில நபர்கள் கல்வியங்காடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில் கல்வியங்காட்டு பகுதியில் காவல்துறையினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த வேளை மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பெட்டி ஒன்றுடன் பயணித்த இருவரை வழிமறித்த காவல்துறையின சோதனை செய்தனர்.
அதன் போது குறித்த பெட்டியினுள் , மின் குமிழ்கள் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் காணப்பட்டன. அவற்றுக்குள் 120 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தன நிலையில் அவை மீட்கப்பட்டன.
அதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த சுன்னாகம் மற்றும் கல்வியங்காடு பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.