வீதியால் சென்ற முதியவர் ஒருவரை வழிமறித்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , அந்த முதியவரை கத்தியினால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி விட்டு , முதியவரின் ஒன்றரை பவுண் சங்கிலி மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த முதியவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பகுதியில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து காணப்படுகிறது..
கடந்த வாரம் சங்கானை பிரதேச செயலக பெண் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கடமை முடித்து வீடு திரும்பும் போது , மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் பெண்ணின் சங்கிலி மற்றும் கைப்பை என்பவற்றை கொள்ளையடித்து சென்று இருந்தனர்.
அதேபோல வங்கியில் பணம் எடுத்து விட்டு வீடு நோக்கி சென்ற முதியவரை பகுதியில் வழிமறித்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிப்பறி கொள்ளையடித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் , வீட்டார் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியிடம் , தம்மை காவல்துறையினர் என அறிமுகம் செய்து கொண்டு , வீட்டினுள் புகுந்த மூன்று கொள்ளையர்கள் மூதாட்டியின் சங்கிலியை அறுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று இருந்தனர்.