கடந்த மாதம் பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார். எண் 10, டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அரசர் சார்லசிடம் அறிவித்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். அத்துடன் மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்ட் அளவுக்கு வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. இதனால், பங்குச் சந்தை தடுமாறியது. இந்த மினி பட்ஜெட் பிரித்தானியா மீதான நம்பிக்கையை குலைத்த காரணத்தால், டொலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ஸின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.
இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினா்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தனா். இது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதன்பின்னர் நிதியமைச்சா் குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து உள்துறைஅமைச்சா் சுவெல்லா பிரேவர்மென் பதவிவிலகினார். தான் ஒரு தவறு செய்து விட்டதாகவும், அரசு விதிகளை மீறி விட்டதாகவும் கூறிய அவர், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக கூறினார். அதன்பின்னர் முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர்.
இதனால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவி விலகியுள்ளாா்..
எந்த பிரித்தானியப் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை என்பதனால் இவரது பிரதமர் பதவிக் காலம்தான் பிாித்தானிய வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரதமர் பதவிக் காலமாக இருக்கும்