முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு 1,337.76 கோடி ரூபாய் அபராதத்தை இந்திய தொழில் போட்டி ஆணையம் (சிசிஐ) விதித்துள்ளது.
அண்ட்ராய்டு அறிதிறன்பேசிகளில் முதன்மை பெறும் நோக்கில் முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் விசாரித்தது. சா்வதேச அளவில் பெரும் புகழ்பெற்ற கூகுள் நிறுவனமானது சந்தையில் சாதகமான இடத்தைப் பிடிப்பதற்காக, முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அந்த ஆணையம் உறுதி செய்தது.
அதையடுத்து கூகுள் நிறுவனத்துக்கு 1,337.76 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய தொழில் போட்டி ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
மேலும், முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கூகுள் நிறுவனம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. உரிய கால இடைவெளிக்குள் தன் வா்த்தக செயல்பாட்டு முறையை கூகுள் நிறுவனம் மாற்றிக் கொள்ள வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.