சாகோஸ் தீவுகளில் இருந்து புகலிடம் கோரி வரும் இலங்கை அகதிகள், அவர்கள் தாமாக முன்வந்து இலங்கைக்குத் திரும்பாவிட்டால், அவர்களை பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் நடைமுறைப் பிரச்சனைகள் இருப்பின், வேறு ஒரு நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மொரிஷியஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளால் உரிமை கோரப்படும் சாகோஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள ஒரு தீவான டியாகோ கார்சியாவில் உள்ள முகாமில் குறைந்தது 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
இதுவரை 60 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தாமாக முன்வந்து நாடு திரும்பியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் ஜெஸ்ஸி நோர்மன் அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.