கோவையில் ஒக்டோபர் 23ஆம் தேதி காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் விசாரணையில், நல்ல முன்னேற்றம் இருப்பதால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். ஆனால், சம்பவத்தோடு தொடர்புடையதாக கருதப்படும் சிசிடிவி காட்சி வெளியானதைத் தொடர்ந்து, இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இறந்த நபர், ஏற்கெனவே என்ஐஏவால் விசாரிக்கப்பட்டவர். ஆனால், அவர் மீது வழக்குகள் ஏதும் இல்லை என்கிறார் டிஜிபி சைலேந்திர பாபு. இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்?
கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பகுதியில் ஒக்டோபர் 23ஆம் தேதி அதிகாலையில் கார் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
ஆரம்பத்தில் அந்த காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அதை ஓட்டி வந்தவர் உயிரிழந்ததாக கோவை மாநகர காவல்துறை கூறியது. ஆனால், காரை ஓட்டி வந்தவரின் உடல் முழுவதுமாக கருகியதால் அப்போது அவரின் அடையாளம் தெரியவில்லை. இந்த நிகழ்வுக்குப் பின் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் இயக்குநர், உளவுப்பிரிவு கூடுதல் இயக்குநர் ஆகியோர் கோவை விரைந்தனர்.
வழக்கமாக கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்துக்கு இதுபோன்ற உயரதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை நடத்தாது. அத்தகைய சம்பவத்தை உள்ளூர் காவல்துறையே மாவட்ட அளவிலான வளங்களைக் கொண்டு விசாரிக்கும்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான முதல் கட்ட விசாரணைக்குப் பின், உயிரிழந்த நபரின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜமேஷா முபின் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது வீட்டை காவல்துறையினர் சோதனை செய்ததில், அழுத்தம் குறைவான நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான கோலி குண்டுகள், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
மேலும், “உயிரிழந்த நபர் ஏதும் அமைப்பைச் சேர்ந்தவரா என்பதெல்லாம் தெரியவில்லை. அப்படி இல்லாமலும் இருக்கலாம்.” என்றும் அவர் கூறினார்.
வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதால் என்ஐஏ இந்த வழக்கை விசாரிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “இந்த வழக்கில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நம் விசாரணை முடிந்த பிறகே அது குறித்து தெரியவரும்” என்று அவர் தெரிவித்தார்.
உடல்கூராய்வுக்கு நடவடிக்கை
இதற்கிடையே, கோவை கார் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபினின் உடல், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் கூராய்வு செய்யப்பட்டு அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்ட போதும் அதை அடக்கம் செய்ய பல இடங்களில் ஜமாத்துகள் அனுமதிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் பூ மார்க்கெட்டில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் பள்ளிவாசலில் ஜமேசாவின் உடலை அடக்கம் செய்தனர். முன்னதாக, உடல் கூராய்வு நடந்தபோது மருத்துவர்கள் குழு மட்டுமின்றி, காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், இறந்தவரின் உறவினர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர். உடற்கூராய்வு நிகழ்வு முழுமையாக காணொளியில் பதிவு செய்யப்பட்டது. அப்போது 13 உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு ரசாயன பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூரில் உள்ள முஸ்லிம் மத பெரியவர்கள், ஜமேசாவின் குடும்பத்தினரிடம் பேச முயன்றோம். ஆனால், எவரும் பேசுவதற்கு முன்வரவில்லை. தற்போது கார் தீ பற்றி எரிந்த பகுதி முழுவதும் சீராக்கப்பட்டு அங்கு வழக்கமான தொழில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களிடமும் நாம் பேச முயன்றோம். அவர்களும் பேசுவதற்கு முன்வரவில்லை.
தனிப்படை விசாரணை
ஜமோசா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். முபினுக்கு கார் வாங்கி கொடுத்தவர். அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என அனைவர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நேற்று ஏழு பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். கோவையில் வேறு சில இடங்களில் நேற்று சோதனைகள் நடத்தப்பட்டன.
இதில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது தல்கா மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
”10,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட மாருதி கார்”
இதில் முகமது தல்கா என்பவர் தான் முபினுக்கு மாருதி காரை 10,000 ரூபாய்க்கு வாங்கி கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் சிலர் முபின் வீட்டின் முன்பு சிசிடிவி காட்சிகளில் உள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இதற்கு முன்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தியுள்ளது.
முபின் உட்பட கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேர் அமைப்பின் பின்னணியில் இயங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் காவல்துறை அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது விசாரணை வளையத்திற்குள் இருப்பவர்கள் 2016 , 2019ஆம் ஆண்டுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் என்ஐஏ இவர்களது வீடுகளில சோதனை நடத்தியது.
ஜமேசா முபினுக்கு மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தந்தை இறந்து விட, தாய் மட்டும் இருக்கிறார். முன்பு பழைய புத்தகம் விற்பனை செய்து கொண்டிருந்தவர். தற்போது பழைய துணி வாங்கி விறகும் பணி செய்து வந்துள்ளார்.
ஜமேசா முபின் உக்கடம் பகுதியில் உள்ள ஹாஜி முகம்மது பிள்ளை ராவுத்தர் தெருவில் உள்ள வீட்டில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்துள்ளார். அதற்கு முன்னர் ஜி.எம்.நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் தீவிரம் கருதி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் கோவையிலேயே முகாமிட்டுள்ளனர்.
அத்துடன் காவல்துறை மேற்கு மண்டல தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஐஜிக்கள் மற்றும் எட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 10 மாவட்ட காவலர்களுடன் இணைந்து 240 (Rapid action force) மத்திய அதிவிரைவு படையினர் என சுமார் 3,000 பேர் கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அதிவிரைவு படையினர் கோவை உக்கடம் மற்றும் கண்ணப்பன் நகர் பகுதிகளில் இரண்டு குழுக்களாக பிரிந்து வஜ்ரா வாகனங்களுடன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக மக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலும் டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 1,200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிற நிலையில் அதிரடி விரைவு படையினரும் கோவையின் பிரதான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட கோவையின் பிரதானமான இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகள்
இந்த நிலையில், ஜமேசா முபினின் வீட்டின் அருகே சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அறிந்து அதில் இருந்த காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த சிசிடிவி காட்சிகளில், கடந்த சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேசா முபின் வீட்டில் இருந்து முபின் உள்ளிட்ட 4 பேர் ஒரு மூட்டையில் பொருட்களை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில் இடம்பெற்ற நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பலரும் இடுகைகளை பதிவிட்டு வருகின்றனர்.
அக்டோபர் 23ஆம் தேதி இரவு 8.43மணிக்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ட்வீட் ஒன்றில், “கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு வெறும் வெடிப்பு சம்பவம் அல்ல. இதில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ்ஐஎஸ் குழுவுக்கு தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இதை பொதுவெளியில் வந்து ஒப்புக்கொள்வாரா? 12 மணி நேரமாக தமிழ்நாடு அரசு இந்த தகவலை மறைத்து வருகிறது. இது நுண்ணறிவு பிரிவு மற்றும் திமுக அரசின் தோல்வி இல்லையா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இந்த சம்பவம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாதம் எந்த மூலையிலிருந்து, எந்த முகாமிலிருந்து முளை விட்டாலும் அதை ஆரம்ப நிலையிலேயே அடியோடு கிள்ளி எறிந்திட வேண்டும். தமிழகத்தின் அமைதிக்கும் நல்லாட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.
என்ஐஏ என்றால் என்ன?
என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை 2008ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. தீவிரவாதம், நாடுகளுக்கு இடையிலான கள்ளநோட்டு புழக்கத்தை தடுப்பது, தீவிரவாத சம்பவங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்வதற்காக பிரத்யேகமாக இந்த முகமை உருவாக்கப்பட்டது. இந்த முகமை உருவாக்கப்படும்வரை தீவிரவாதம் தொடர்பான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து வந்தது.
இந்த முகமை தொடங்கியது முதல் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை, 473 வழக்குகள் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று இந்திய உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.
என்.ஐ.ஏ.வுக்கென்று தனித்த முறைமையுடன் கூடிய விசாரணை வழிகாட்டல்கள், வழக்காடு மன்றங்கள், வழக்கறிஞர்கள் ஆகியவற்றை தேசிய புலனாய்வு முகமை சட்டம் 2008 வரையறுக்கிறது.
எப்போது என்ஐஏ விசாரிக்கலாம்?
“தேச பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு என்று அரசு கருதும்பட்சத்தில் என்ஐஏ ஒரு வழக்கை தாமாகவே விசாரிக்கலாம். இதற்காக மாநில அரசிடம் இருந்து அனுமதி ஏதும் தேவையில்லை என்கிறார் ஓய்வுபெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கார்த்திகேயன்.
மேலும் அவர், “ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான விசாரணைகள், சதித்திட்டம் அல்லது தேச பாதுகாப்பு தொடர்பான புலனாய்வுகளில் என்ஐஏ ஈடுபடுத்தப்படலாம்.
அதேபோல, ஒரு வழக்கை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றோ அல்லது தீவிரவாத தொடர்பு கொண்டதாகவோ இந்திய அரசு கருதும்பட்சத்தில், அந்த வழக்கை என்.ஐ.ஏ. மூலம் விசாரிக்கலாம்.
இதற்காக மாநில அரசிடம் இருந்து எந்த அனுமதியும் பெறப்பட வேண்டியதில்லை. பொதுவாகவே, இதுபோன்ற தருணங்களில் வழக்கை ஒப்படைக்க மாநில காவல்துறை தயாராகவே இருக்கும். அத்துடன், இந்த விசாரணைக்கு மாநில அரசும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
“சில சமயங்களில் நீதிமன்ற வழிகாட்டுதலிபடியும் ஒரு வழக்கை, என்ஐஏ விசாரிக்கலாம் என்கிறார் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன்.
என்ஐஏவுக்கு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனியாக ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது. அதன் தலைமை அதிகாரியாக டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரியும் இரண்டு எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளும் உள்ளனர்.ஆனால்,தமிழ்நாடு முழுவதும் தன்னிச்சையாக விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த என்ஐஏவுக்கு தமிழ்நாட்டில் சட்ட அனுமதி இல்லாத நிலை இருந்தது.
இதன் காரணமாக எந்தவொரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இருந்தாலும், அதற்கு முன்பாக டெல்லியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதனஅ பேரிலேயே விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளை என்ஐஏ மேற்கொண்டு வந்தது. அக்டோபர் 17ஆம் தேதிதான் தமிழ்நாடு முழுவதும் ஒரு காவல் நிலையம் போல என்ஐஏ செயல்படுவதற்கான அனுமதியை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி என்ஐஏ 14 வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த முகமைக்கு சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் சாலையில் புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அதுவரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்தபடி இந்த முகமையின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.
BBC Tamil