கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் இன்றைய தினம் வியாழக்கிழமை போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரி , திறந்த பல்கலைக்கழகம் – யாழ்ப்பாணம் , யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவைக்கு அண்மையில் உள்ள கலட்டி சந்திக்கு அருகில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த காவல்துறை குழுவினர் நடாத்திய சோதனை நடவடிக்கையில், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று மாணவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனவும் , அவர்கள் இருவரும் நல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மற்றையவர் பதுளையை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 22 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.