கைக்கடையில் நகை வாங்குவது போன்று பாசாங்கு செய்து நகையை திருடிய திருடனை ஒரு மணித்தியாலத்திற்குள் காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்றைய தினம் நகை வாங்குவதற்கு என வந்திருந்த நபர் கடையில் இருந்த நகைகளை பார்வையிட்டுள்ளனர்.
அதன் போது ஒன்றரை இலட்ச ரூபாய் பெறுமதியான சங்கிலி ஒன்றினை திருடி தனது உடைமையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து சாதுரியமாக நகை வாங்காது வெளியேறி சென்றுள்ளார்.
குறித்த நபர் வெளியேறி சில நிமிடங்களில் தமது சங்கிலி திருடப்பட்ட விடயம் அறிந்த நகைக்கடை உரிமையாளர் தனது கடையில் வேலை செய்யும் இளைஞனை அந்நபரை அடையாளம் கண்டு பின் தொடருமாறு அறிவுறுத்தி விட்டு , சாவகச்சேரி காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
கடையில் நகையை திருடிய நபர் கடையில் இருந்து வெளியேறி , வவுனியா செல்லும் பேருந்தில் ஏறி பயணித்துக்கொண்டிருந்த வேளை , அந்நபரை பின் தொடர்ந்த இளைஞனின் தகவலுக்கு அமைய காவல்துறையினர் குறித்த பேருந்தினை வீதியில் வழிமறித்து நகையை திருடியவரை மடக்கி பிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை சாவகச்சேரி காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.