கொவிட் காலப் பகுதியில் இளைஞர் யுவதிகள் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு தொகுதி விசேட வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். வடபகுதியில் நீரிழிவு நோயின் தாக்கம் தொடர்பில் தொடர்பில் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
நீரிழிவு நோயின் தாக்கம் கொழும்பில் குறிப்பாக மேல் மாகாணத்தில் 30 வீதமானவர்களுக்கு காணப்படுகின்றது. அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 சதவீதமானவர்களுக்கு நீரிழிவுநோயின் தாக்கம் காணப்படுகின்றது
குறிப்பாக கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த கொவிட் காலப் பகுதியில் இளைஞர் யுவதிகள் அதாவது 20 – 40 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சை பிரிவை எடுத்துக் கொண்டால் கடந்த வருடத்தோடு ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார் 3000-க்கும் மேற்பட்ட நோயாளர்கள் புதிதாக பதிந்திருக்கின்றார்கள்.
நவம்பர் மாதம் உலக நீரிழிவு விழிப்புணர்வு வாரத்தில், யாழ் மாவட்டத்தில் பல செயற்திட்டங்கள் செயற்படுத்தப்பட வுள்ளது.
மிக முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானது,
நீரழிவு நோய்க்கு , தவறான உணவு பழக்க வழக்கங்கள் அப்பியாசம் அற்ற வாழ்க்கை முறை என்பன மிக முக்கியமான காரணங்களாகவுள்ளது,
இன்றைய காலகட்டத்தில் இந்த மேலைத்தேய உணவுகள் துரித உணவுகளில் நாட்டம் அதிகரித்து செல்வதனால், நீரிழிவின் தாக்கமானது அதிகரித்துச் செல்வதை நாங்கள் காணக்கூடியதாகவுள்ளது.
அதேபோல் மன அழுத்தம், நித்திரை குறைவு போன்ற பல காரணங்களும் இதற்கு ஏதுவாக அமைகின்றன.
நீரிழிவு நோய் ஏற்படும்போது சில அறிகுறிகள் ஏற்படும். அந்த அறிகுறிகளை நாங்கள் அடையாளம் கண்டு, உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளும் போது குறித்த நோயிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்றார்