Home இலங்கை சீனாவின் அட்டை குஞ்சை நம்பியே வடக்கில் கடல் அட்டைப் பண்ணை முதலாளிகள் – ந.லோகதயாளன்!

சீனாவின் அட்டை குஞ்சை நம்பியே வடக்கில் கடல் அட்டைப் பண்ணை முதலாளிகள் – ந.லோகதயாளன்!

by admin

இலங்கையிலேயே வடக்கில் மட்டும் முனைப்பு பெறும் கடலட்டைப் பண்ணைகள் தற்போதுவரை உத்தியோக பூர்வமாக 616 ஏக்கரில் வந்து விட்டன என்கின்றனர் அதிகாரிகள்.

இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே கடல வளம் அதிலும் குறிப்பாக மீன், இறால், கணவாய் மட்டுமன்றி நண்டு என்பனவும் கடலில் அழிவடைந்து வருவதனால் 2030 ஆம் ஆண்டு கடல் உணவுகளும் பண்ணைகளில் மேற்கொள்ள வேண்டும் என உலக உணவு உற்பத்தி நிறுவனம் பரிந்துரைப்பதாக கூறப்படுகின்றது.

இந்த நிலைமையிலே வடக்கின் 4 கடல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தவிர்ந்த ஏனைய 3 மாவட்டங்களும் கடல் அட்டை வளர்ப்பிற்கு உகந்த மாவட்டங்கள் என கண்டுகொள்ளப்பட்டதனால் தாராளமாக பண்ணைகள் வழங்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 355 பண்ணைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு
265 கடல் அட்டைப் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இவற்றினைவிட மேலும் 209 பண்ணைகளிற்கு கோரிக்கைகள் உண்டு.

தற்போது குடாநாட்டில் உள்ள 265 பண்ணைகளில் மிக அதிகமாக வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 118 பண்ணைகள் உள்ளன. இந்த 118 பண்ணைகளும் 250 ஏக்கர் விஸ்தீரணத்தில் உள்ளது.

இதேநேரம் இரண்டாவதாக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 273 கடல் அட்டைப் பண்ணைகள் உள்ளதோடு 200 பண்ணைகள் கோரப்படுகின்றன. மன்னார் மாவட்டத்தில் தற்போது 79 கடல் அட்டைப் பண்ணைகள் உள்ள அதேநேரம்
அந்தோணியார்புரம் பகுதிதியல் 80 பண்ணைக்கான கோரிக்கையும் இலுப்பைக்கடவையில் 80 பண்ணைகளும் விடத்தல்தீவில் 150 பண்ணைகளும் கோரப்படுகின்ற அதே சமயம் தேவன்பிட்டியிலும் 54 பண்ணைகள் கோரப்படுகின்றன.

கடல் பண்ணைகள் ஒரு புறம் எனில் மறுபுறத்தே இறால் பண்ணைகளும் ஆரம்பித்து விட்டன. இறால் பண்ணைகளைப் பொறுத்த மட்டில் மன்னாரில் 04 பண்ணைகள் உள்ளன. விரைவில் மேலும் 20 பண்ணைகள் வரவுள்ளன. இருக்கும் நான்கு பண்ணைகளும் மொத்தமாக 135 ஏக்கரில் அமைந்துள்ளன. இதில் ஒரு பண்ணை 65 ஏக்கரில் ரி.எஸ்.எவ் என்னும் நிறுவனம் நடாத்துகின்றது. மேலும் ஒரு பண்ணை 30 ஏக்கரிலும் இரு பண்ணைகள் தலா 10 ஏக்கரிலும் உள்ளன.

இதேபோன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரு பண்ணைகள் உள்ளன விரைவில் மேலும் 5 பண்ணைகள் வரவுள்ளன. இருக்கும் இரு பண்ணைகளில் ஒன்று 140 ஏக்கரிலும் மற்றையது 60 ஏக்கரிலுமாக மொத்தம் 200 ஏக்கரிலும் கிளிநொச்சியில் தற்போது 3 பண்ணைகளும் உள்ளன. இதற்கும் அப்பால் இறால் பண்ணைகளை மிக வேகமாக அதிகரிக்க திட்டமிடப்படுகின்றது. அதறகமைய 2025 ஆம் ஆண்டில் 2 ஆயிரம் ஏக்கரில் இறால் பண்ணை அமைக்கும் வகையில் செயல்ப்படுத்தப் படுகின்றன.

இதேநேரம் கடல் அட்டைகளைப் பொறுத்த மட்டில் ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் குஞ்சு வேண்டும். 6 மாதம் ஒரு தடவை 2 ஆயிரம் குஞ்சு என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் விடப்பட வேண்டும். இதன் அடிப்படையில் வடக்கிற்கு வருடம் 5 மில்லியன் கடல் அட்டை குஞ்சு வேண்டும்.

கடல் அட்டை குஞ்சை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வடக்கில்
அரியாலை மற்றும் மன்னார் ஆகிய இரு இடங்களில் மட்டுமே தற்போது வரையில் உண்டு. இதில் மன்னார் பண்ணை அரச பண்ணையாகவும் அரியாலை பண்ணை குயி-லான் பண்ணை என்னும் சீனர்களின் பண்ணையாகவும் உள்ளது. குயி-லான் பண்ணை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையான 5 மாத காலத்திற்குள் மட்டும் 4 லட்சம் குஞ்சு உற்பத்தி செய்துள்ளமை உறுதிப்படுத்தப்படுகின்றது.

கடல் அட்டைக் குஞ்சுகளில் 2 மாதம் வரையான குஞ்சு 50 ரூபா இவை 6 மாதங்களில் அறுவடை செய்யலாம். அறுவடையின்போது 600 ரூபா வரை விறபனை செய்ய முடியும் . கடல் அட்டை வளர்ப்பிற்காக அமைக்கப்படும் பண்ணைகளிற்குள் எந்தவொரு உணவும் போடுவதேஇல்லை.

இந்த கடல் அட்டை பண்ணைகள் அமைப்பதற்கு ஒரு ஏக்கருக்கான அனுமதிக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாவும் பிரதேச செயலகத்திற்கு 9 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படும் அதேநேரம் கரையோரத் திணைக்களத்திற்கு 5 ஆயிரமும் செலுத்தப்படுகின்றது.

இந்த நிலைமையிலேயே மீனவர்கள் தமது பாரம்பரிய தொழில் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தும் விடயத்தில் நீங்கள் ஏன் கருசணை செலுத்தவில்லை என இப் பண்ணைக்கான இறுதி அனுமதியை வழங்கும் நெக்டா நிறுவனத்தின் வட மாகாண பிரதிப் பணிப்பாளரான நிருபராஜ்சைத் தொடர்புகொண்டு கேட்டபோது,

எந்தவொரு பண்ணையும் உள்ளூர் மீனவ அமைப்பின் ஒப்புதல் கடிதம் இன்றி வழங்கப்படவில்லை. அத்தனை பண்ணைக்கும் இதே மீனவ சங்கங்களே ஒப்புதல் கடிதங்களை வழங்கினர் தற்போதும் வழங்குகின்றனர். அதற்கும் அப்பால் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர்கள் அந்த இடத்தில் அமைக்கப்படலாம் என்ற சிபார்சினையும் முன் வைத்த பின்பு பிரதேச செயலாளரின் நில அனுமதிக் கடிதம் மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் ஒப்புதல் என்பனவும் வழங்கிய பின்பே அனுமதியை வழங்குகின்றோம் என்கின்றனர்.

இதேநேரம் 2030ஆம் ஆண்டுடன் மீனபிடி நிறுத்தப்பட்டு பண்ணை முறைமையே வரும் என நெக்டா கூறுவது தொடர்பில் மீனவர்களிடம் கோரியபோது, ஆயிரம் ஆண்டுகளாக இடம்பெறும் ஓர் முறமை 10 வருடத்தில் அழிந்து விடும் என படித்த துறைசார் நிபுணர்கள் கூறியதாக கூறப்படுவதனை எந்த பாமரனும் நம்பமாட்டான். அதற்கும் அப்பால் இன்று இந்த பண்ணைகளில் இன்று 50 வீதமானவை கடற்றொழிலாளி அல்லாத முதலாளிகளே அதகம் முதலிடுகின்றனர். அதனால் மீனவர் வெறும் கூலித் தொழலாளியாக மாற்றப்படுகின்றான். பல வருமான முதலாளகள் வங்கிகளில் பணத்தை வைப்புச் செய்தால் அரசிற்கு வரி செலுத்த வேண்டும் என்பதற்காக பினாமிகளின் பெயரில் இந்த கடல் அட்டைப் பண்ணைகளில் முதலிடுகின்றனர் எனக் கூறுகின்றனர்.

இது தொடர்பில் வடக்கு மாகாண மீனவர் சங்க சமாசத் தலைவர் அ.அன்னராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

கடல் அட்டைப் பண்ணைகளே சிறந்த முறை அதுவே எதிர்கால தொழில் முறை என அறிக்கை வழங்கிய நிபுணர் யார், உண்மை மீனவனை கூலித் தொழிலாளியாகவும. கடலையே தெரியாத பண முதலைகளிடம் இருக்கும் கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்குமா இன்று கடல்தொழில் பயன்படுத்தப்படுகின்றது. எல்லா சிபார்சும் பெற்றே அனுமதி வழங கப்படுவதாக நெக்டா கூறினால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் மனித உரிமை ஆணைக் குழுவின் முன்பாக கூறியது பொய்யான தகவலா, இதேபோன்று ஊடகவியலாளர்கள் சென்று பருத்தித்தீவில் எந்த அனுமதியும் இல்லாது 60 முதல் 70 ஏக்கர் பண்ணை இடம்பெறுவதனை உறுதி செய்து வந்தமை பொய்யானதா, பாரம்பரிய தொழிலாளி கடலிற்குள் செல்ல முடியவில்லை, படகை இறக்க முடியவில்லை எனக் கூறுவது பொய்யானதா என கேள்விகளை அடுக்குகின்றார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் எமது நாட்டவர் எவருமே உண்ணாத உணவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து உற்பத்தி செய்து இத்தனை மில்லியன் டொலருக்கு ஏற்றுமதி செய்தோம் எனக் கூறுபவர்கள் இதே கடல் உணவுகளை அதாவது எமது மக்கள் உண்ணும் வகை கடல் உற்பத்திகள் ஆண்டிற்கு எத்தனை மில்லியன் டொலரிற்கு இறக்குமதி செய்கின்றீர்கள். நெத்தலிக் கருவாடு எனவும் தகரத்தில் அடைக்கப்பட்ட ரின் மீன் எனவும் இறக்குமதி செய்ய வெளியேறும. டொலரை ஏன் மறைக்கின்றீர்கள். மீன் பிடியில் அதிக ஏற்றுமதி டொலர் இல்லாது விடினும் கருவாடு மற்றும் ரின் மீன் இறக்குமதியை குறைத்து டொலர் வெளியேற்றத்தை நாமே தடுக்கின்றோம் என்பதனை அதிகாரிகளும் அரசும் மறைக்கின்றது என்றார்.

இவ்வாறான சர்ச்சையின் மத்தியிலேயே இன்று வடக்கின் பண்ணைகள் உள்ளன.

இவை தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

எமது மக்கள் உண்ணாத, எமது மீனவர்கள் விரும்பாத, மீனவர்களை கூலியாளாக மாற்றும் தொழிலை செய்து டொலரை உழைக்க முனைவதை தவிர்த்து மீனவனை வளர்த்து எமது மக்கள் உண்ணும் உணவை உற்பத்தி செய்து அதனையே வளர்க்க முடியும். கடல் அட்டை கொம்பனிகள், ஏற்றுமதி கொம்பனிகளை வளர்த்துவிடத் துடிப்பவர்கள் மீனவனை வளர்த்து பெரு மீனை உற்பத்தி செய்து ரின்னில் மீனை அடைக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க முயற்சிக்கப்பட்டதா என்றால் அதற்கு இல்லை என்ற பதிலே உள்ளது. அதனால் மீனவ அமைப்புக்கள் வைக்கும் குற்றச் சாட்டுகள் நியாயமானவை. ஆயிரம் ஆண்டுகள் உள்ள மீன்பிடி முறமை வெறும் 10 வருடத்தில் அழிந்து விடும் என எந்த ஆய்வு நிறுவனம் கண்டு பிடித்தனர். அல்லது யார் அந்த சான்றிதழை வழங்கியவர். 10 ஆண்டு கடந்த பின்பும் அதே தொழில் முறமை அழியாது பேணிப் பாதுகாக்கப்பட்டால் இந்த தவறான கூற்றை கூறியவர்கள் என்ன இழப்பீட்டை வழங்க தயாராகவுள்ளனர் எனவும் கேள்வி எழுப்பி நிற்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More