அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
இரண்டு விமானங்களும் தாழ்வான உயரத்தில் ஒன்றையொன்று மோதுவதையும், அதில் ஒரு விமானம் பாதியாக உடைவதையும் காணொளிகளில் பார்க்க முடிகிறது. அவை தரையில் விழும்போது தீப்பிழம்பு ஏற்பட்டதையும் காண முடிகிறது.
டல்லாஸ் அருகே நடைபெற்ற ஒரு நினைவு கூறல் நிகழ்வில் இரண்டு விமானங்களும் பங்கேற்றிருந்தன. அதில் ஒரு விமானம் போயிங் பி-17 ஃப்ளையிங் ஃபோர்டஸ் வகையைச் சேர்ந்தது.
இரு விமானங்களிலும் எத்தனை பேர் இருந்தனர், அதில் இருந்த எவரேனும் உயிர் பிழைத்தார்களா என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது.
அமரிக்க முன்னாள் ராணுவ வீரர்களைக் கௌரவிப்பதற்காக இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறும். மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், 4,000 முதல் 6,000 மக்கள் இதை கண்டு ரசித்தார்கள்.
டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் இதை மோசமான துயரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
“காணொளிகள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. இன்று நம் குடும்பங்களை மகிழ்விக்கவும், கற்பிக்கவும் வானில் ஏறிய ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்த எரிக் ஜான்சன், தரையில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
சனிக்கிழமை விமான சாகச கண்காட்சியில் பல விமானங்கள் பங்கேற்க இருந்ததாக இந்த நிகழ்வின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிரான வான்வழிப் போரில் வெற்றி பெறுவதில் பி-17 விமானம் முக்கிய பங்கு வகித்தது.
மற்றொரு விமானம், பி-63 கிங்கோப்ரா வகையைச் சேர்ந்தது. இந்தப் போர் விமானம் அதே போரில் சோவியத் ஒன்றியத்தின் விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது.
- எழுதியவர்,ஜார்ஜ் ரைட்
- பிபிசி நியூஸ்