முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், ரொபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்த நிலையில் கடந்த மே மாதம் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.
இதே காரணத்தை கொண்டு நீதிமன்றத்தை அணுகியிருந்த நளினி, முருகன் உள்ளிட்ட ஆறு பேரையும் அண்மையில் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்நிலையில் இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
குறிப்பாக” 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த இவர்களை சிறப்பு முகாமில் அடைக்காமல் முழுவதுமாக விடுதலை செய்ய வேண்டும் ”என தமிழ அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு பின்னால் இருக்கும் பிரச்னை குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “30 வருட சிறைக்கு பிறகும் நால்வரை சிறப்பு முகாமில் அடைப்பது ஏற்புடையது அல்ல என்ற ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் சட்டப்படி வெளிநாட்டவர் இங்கு இருந்தால் அகதியாகவோ அல்லது வெளிநாட்டவர் சட்டம் பிரிவு-12 ன் படி ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட விசா அனுமதியோடு தான் இருக்க முடியும்.
அவர்கள் விரும்பிய நாடு செல்ல உரிய கடவுச் சீட்டு,விசா ஆவணங்களை அவர்கள் ஏற்பாடு செய்யும் வரை தற்காலிகமாக சிறப்பு முகாமில் (அகதி அந்தஸ்து இல்லாது)தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எப்போதும் போல் சட்ட நடைமுறை தெரியாத சில கட்சியினர் தமிழ்நாடு அரசை குறை கூறி தங்கள் இருப்பே காட்ட ஆரம்பித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது சிறப்பு முகாமில் உள்ள இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப ‘க்யூ’ பிரிவு காவற்துறையினர் முயன்று வருகின்றனர். இதற்கு தேவையான ஆவணங்களையும் தயாரித்து வருகின்றனர்.
இதில் முருகன் மேல் மற்றொரு வழக்கு இருப்பதால் அவரை இலங்கைக்கு அனுப்ப தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. இவ்விவகாரத்தில் முருகன் மற்றும் ஜெயக்குமார் இந்திய குடிமக்களை திருமணம் செய்துள்ளதால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.