311
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்கள், கட்டட இடிபாடுகளை கொண்டு நிரவப்பட்டு வருகின்றது. செம்மணி யாழ்.வளைவு பகுதியை சூழவுள்ள நீரேந்து பகுதிகளாக உள்ள சதுப்பு நிலங்களை கற்கள் , மண் மற்றும் கட்டட இடிபாடுகள் என்பவற்றை கொட்டி அப்பகுதியை மேடாக்கும் வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த நீரேந்து பிரதேசத்தினை மேடாக்கும் நடவடிக்கையால் , அயலில் உள்ள வயல்களில் நீர் தேங்கி நிற்பதனால் வயல்கள் அழிவடையும் நிலைமை காணப்படுகிறது. ஏற்கனவே அப்பகுதிகளை விஷமிகள் குப்பைகளையும் , கழிவுகளையும் கொட்டி வருவதனால் , சதுப்பு நிலப்பகுதிகள் பாதிக்கப்பட்டு சதுப்பு நில தாவரங்கள் அழிவடைந்து வரும் நிலையில் , தற்போது அப்பகுதிகளில் கற்கள் , கட்டட இடிபாடுகளை கொட்டி வருவதனால் சதுப்பு நிலங்களை முற்றாக அழிக்கும் செயற்பாடு என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். குறித்த பகுதியில் , தனியார் சிலர் கடைகளை நிறுவதற்காக குறித்த பகுதிகளை மேடாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை நிறுவதற்கு தனியார் ஒருவர் முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் அதற்கு சமூக மட்டத்தில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது .
Spread the love