வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்கள் எனக் கூறப்படும் பின்வரும் அறிவித்தல்களை 2303/29 இலக்கம் கொண்ட 27.10.2022 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தகமானியில் பிரசுரித்துள்ளார் என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.1) 2022 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க வாழ்வாதார முகாமைத்துவ சேவைகள் நியதிச் சட்டம்
2) 2022 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க சுற்றுலாப் பயணிகள் நியதிச் சட்டம்
இந்த ஆவணங்களில் தாம் அரசியலமைப்பின் உறுப்புரிமை 254 C இன் கீழான ஏற்பாடுகளின் படியும் உறுப்புரிமை 254 T இன் கீழ் 24.03.1990 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் கீழான ஏற்பாடுகளின் படியும் செயற்படுத்துவதாகக் கூறியுள்ளார். இந்த ஆவணங்களின் அமைப்பு முறை மற்றும் சொற்பிரயோகங்களின் மீது விமர்சிப்பதை நான் தவிர்க்க விரும்புகின்றேன்.
எனினும், ஆளுநரின் நிறைவேற்று அதிகாரம் தொடர்பாக குறிபிடும் அரசியலமைப்பின் 254 C உறுப்புரிமையின் கீழ் சட்டவாக்க அதிகாரத்தை தாம் பிரயோகிப்பதாக கூறுவது மிகவும் குழப்பகரமாகக் காணப்படுகின்றது.
உண்மையில் இந்த உறுப்புரிமை மாகாண சபைகளின் நியதிச் சட்டவாக்க அதிகாரம் பற்றியும் குறிப்பிடுகின்றது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் நியதிச் சட்ட உருவாக்கம் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடு மிகவும் வெளிப்படையானது.
ஆளுநரின் தற்றுணிவு அதிகாரம் அரசியலமைப்பின் உறுப்புரிமை 254 F (2) படி ஜனாதிபதியின் பணிப்பின் கீழானதாக வேண்டும் என்பதும் ஆளுநரின் நிறைவேற்று அதிகாரம் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தில் 15 (2)ஆம் பிரிவின்படி ஜனாதிபதியின் பெயரில் என கூறப்பட வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டியது மிகப் பொருத்தமானதாகும்.