184
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் உள்ள வீதிகளை புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து மூளாய் அரசடி சந்தியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை வீதி மறிப்பு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ள, யாழ் ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, மாவடி – மூளாய் வீதி, வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதி என்பவற்றை தற்காலிகமாகவேனும் புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மழை காலங்களில் இந்த வீதிகளூடான போக்குவரத்து முற்றாக தடைப்படுகின்றது என தெரிவித்த அப்பகுதி மக்கள் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் இவ்விடயத்தில் தீவிர கரிசனை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.
போராட்டத்தின் முடிவில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட செயலர் ஆகியோருக்கு முகவரியிடப்பட்ட கடிதங்கள் வலி.மேற்கு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. இதன் பிரதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
இதேவேளை வீதிப் புனரமைப்பை வலியுறுத்தி சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love