180
தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரனின் 71ஆவது பிறந் தநாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டமையால், நாவலர் வீதியில் உள்ள அவரது நிறுவனத்தின் முன்பாக பெருமளவான மக்கள் அதிகாலை முதல் குவிந்திருந்தனர்.அதனால் நாவலர் வீதி ஊடான போக்குவரத்து தியாகி அறக்கொடை நிறுவனத்தின் முன்பாக முற்றாக தடைப்பட்டு காணப்பட்டது. கைக்குழந்தைகள் மற்றும் வயதானோர் , விசேட தேவைகள் உடையோர் , பெண் தலைமைத்துவ குடும்பத்தினர் என பெருமளவான மக்கள் குவிந்திருந்தனர்.
“தியாகியின் பிறந்தநாளை முன்னிட்டு உதவிகள் வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்திகளை நம்பி அதிகாலை 4 மணிக்கு முதலே வந்துட்டோம். பலர் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்துள்ளார்கள். காலையிலையே வந்தமையால், வீட்டில் இன்றைய தினம் சமைக்க கூட வில்லை. அதனால் வீட்டில் உள்ளோர் இன்றைக்கு பட்டினி கிடக்கிறார்கள். நாமும் காலையில் இருந்து காத்திருப்பதனால் , பட்டினியுடன் தான் மழைக்குள் நனைந்தவாறும் இருக்கிறோம். மதியத்தை தாண்டியும் எமக்கான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.
பலர் கைக்குழந்தைகளை வீட்டில் தனியே விட்டு விட்டு வர முடியாததால் , குழந்தைகளுடன் இங்கே வந்து அவர்களும் குழந்தைகளும் பட்டினியில் வாடுகின்றார்கள் ” என அங்கிருந்த பலரும் தமது ஆதங்கத்தை கண்ணீருடன் தெரிவித்தனர். இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது ,
இவ்வாறான உதவி திட்டங்களை ஒரு பொறிமுறை ஊடாக வழங்க வேண்டும் கிராம சேவையாளர்கள் ஊடாகவோ , அல்லது பிரதேச செயலகங்கள் ஊடாகவோ ஒரு பொறிமுறையை ஏற்படுத்தி அதன் ஊடாக அவற்றினை வழங்கினால் , உதவி பெற வருகிறவர்கள் மத்தியில் தேவையற்ற அலைச்சல்கள் இருக்காது. எவ்விதமான பொறிமுறைகளும் இல்லாமல் உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டமையால் , பலரும் உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்று பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான கால பகுதியில் ,என்ன உதவி வழங்கப்படவுள்ளது என தெரியாமல் பலரும் பெறுமதியான நேரத்தையும் தமது பணத்தினையும் செலவழித்து மழைக்குள்ளும் காத்திருக்கின்றார்கள். இதொரு வேதனைக்குரிய விடயம். இனிவரும் காலங்களில் கிராம சேவையாளர் , பிரதேச செயலர்கள் ஊடாகவோ ஏதேனும் ஒரு பொறிமுறையை உருவாக்கி அதன் ஊடாக உதவிகளை செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவி திட்டங்கள் வழங்கப்படுவதனை அதிகாரம் கொண்டு தடுப்பதனை நாம் விரும்பவில்லை. இனிவரும் காலத்தில் அவர்கள் சரியான பொறிமுறை ஊடாக உதவிகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இதேவேளை , உதவி பெற வந்தவர்களினால் ஏற்பட்ட கூட்ட நெரிசல்களில் சிக்கி சிலர் சுவாசிக்க முடியாத சுகவீனமுற்றதாகவும் ,அவர்களுக் கு அங்கு முதலுதவிகள் வழங்கபட்டதாகவும் தெரிய வருகிறது.
Spread the love
1 comment
இந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண் பரிதாபமாக இறந்துவிட்டார். அதை ஏன் எந்த ஊடகமும் பிரசுரிக்கவில்லை ?