12 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல ஆயுத வியாபாரி விக்டர் போட்டையும் (Viktor Bout), ரஸ்ய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரிட்னி கிரைனரையும் (Brittney Grinr) அமெரிக்காவும் ரஷ்யாவும் பரிமாறிக்கொண்டன.
க்ரைனர் பாதுகாப்பாக இருப்பதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஒரு விமானத்தில் வீட்டை நோக்கி பறந்துகொண்டிருப்பதாகவும் இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
“பிரிட்னி நல்ல மனநிலையில் இருக்கிறார் என்று சொல்வதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும், அவர் சுமூக நிலைக்கு திரும்பவதற்கு காலமும் சூழலும் தேவை என, வெள்ளை மாளிகையில் இருந்து அவர் அறிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரியில் மாஸ்கோ விமான நிலையத்தில் கஞ்சா வைத்திருந்ததற்காக க்ரைனர் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் சிறைத்தண்டனைக்கு உள்ளானார்.
கடந்த ஜூலையில் பைடன் நிர்வாகம் கைதிகள் பரிமாற்றத்தை முன்மொழிந்திருந்தது. இந்த நிலையில் நீண்ட காலமாக போட்டின் விடுதலைக்காக காத்திருந்த ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகமும் இதனை ஏற்றுக்கொண்டது.
மேலும் இந்தப் கைதிகள் பரிமாற்றம் அபுதாபி விமான நிலையத்தில் நடந்ததாகக் கூறியது. “ரஷ்ய குடிமகன் தனது தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளார் என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகமும் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது, இருப்பினும் அவர் ரஷ்யாவை அடையவில்லை எனவும், மொஸ்கோவிற்கு அருகிலுள்ள Vnukovo விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார் என்றும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.
இது குறித்து ஓவல் அலுவலகத்தில் கருத்து வெளியிட்ட கிரைனரின் மனைவி செரெல், விடுதலையைப் பெறுவதற்கான பைடன் நிர்வாகத்தின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.