உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான் வேளை. நல்ல தருணம். பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள் என இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிமிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசனின் இல்லத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பில் மனோ கணேசன் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளாா் இந்த சந்திப்ப-ில் தமுகூ நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற எம். உதயகுமாரும் கலந்துக்கொண்டார்.
இதன்போது எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது,
நான் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவரது காலநிலை ஆலோசகராக இங்கே வந்துளேன். இந்த சந்திப்பில், மனோ கணேசன் எனக்கு சமீபத்தில் ஜனாதிபதி நடத்திய சர்வ கட்சி மாநாட்டை பற்றி எடுத்து கூறினார். அது நல்லது. இந்நாட்டில் இனப்பிரச்சினை தீர இது நல்ல வேளை.
இந்நாட்டில் சிங்கள, வடகிழக்கு தமிழர், முஸ்லிம்களுடன், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சமமாக இணைந்து வாழ விரும்புவதை அவர் எனக்கு கூறினார். மேலும், பெருந்தோட்டங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களை பற்றியும் கூறினார். உணவின்மை, வறுமை காரணமாக துன்புறும் அவர்கள் மீது சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன் எனத் தொிவித்தாா்.
மனோ கணேசன், மேலும் கூறுகையில்
வரலாற்றில் எல்லோரும் தவறிழைத்துள்ளோம். கடைசி சமாதான முயற்சி தோற்றது. இதற்கு சில தரப்புகளோ, அனைத்து தரப்புகளுமோ காரணம். அதுபற்றி ஆராய்ச்சி செய்ய இது வேளையல்ல. அது எனது வேலையுமல்ல. இப்போது நாம் வரலாற்றில் இருந்து பாடம் படித்துள்ளோம். ஆகவே முன்னோக்கி நகர எமக்கு உதவுங்கள்.
இங்கே நண்பர் எரிக் சொல்ஹெயிம் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எரிக் சொல்ஹெயிம் இலங்கையில் மிகவும் அறியப்பட்ட ஒரு வெளிநாட்டுக்காரர். அவரது தொடர்புகளையும், அனுபவத்தையும் பயன்படுத்த இதுதான் வேளை. பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள். உங்கள் நண்பர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதை எடுத்து கூறுங்கள். இதை நீங்கள் செய்து இந்நாட்டின் இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் என் பிறந்த நாளை கொண்டாடுவேன்.
இலங்கையின் சமூக பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சி போக்கை நீங்கள் கவனிக்க வேண்டும். கடந்த காலங்களை விட இன்று இந்திய வம்சாவளி மலையக மக்கள் ஒரு இனமாக வளர்ச்சி அடைந்துள்ளார்கள். அவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர் மட்டுமே, அவர்களது பிரச்சினை பெருந்தோட்ட பிரச்சினைகள் மட்டுமே, என்ற காலம் மாறி விட்டது. இன்றைய இனப்பிரச்சினை தீர்வில் அவர்களுக்கும் சம பங்கு வேண்டும். வடகிழக்கு சகோதர உடன்பிறப்பு, முஸ்லிம் உடன்பிறப்பு மற்றும் சிங்கள உடன்பிறப்புகளுடன் நாம் சமமாக வாழ விரும்புகிறோம். இனிவரும் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் இந்த புது வளர்ச்சி போக்கை கவனத்தில் கொள்ளுங்கள் எனத் தொிவித்தாா்