190
பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் முன்பாக அநாவசியமாக மோட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகளில் காத்திருக்கும் இளைஞர்கள் குழுக்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அது தொடர்பில் பெற்றோர்களில் ஒருவர் தெரிவிக்கையில்,
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ள நிலையில் , போதைப்பொருளுக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் , பாடசாலைகளை சூழவுள்ள பகுதிகளில் அநாவசியமாக நடமாடுபவர்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாடசாலைகள் ,தனியார் கல்வி நிலையங்கள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் அவற்றை சூழவுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் , முச்சக்கர வண்டிகள் , துவிச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிலர் தேவையற்று நடமாடுகின்றனர்.
அவ்வாறானவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் வலையமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என எமக்கு பலத்த சந்தேகம் உள்ளது. ஏனெனில் அவர்களின் நடமாட்டங்கள் , ஆடைகள் என்பவை சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது.
அதேவேளை மாணவிகளுடன் சேட்டை விடுவது , போக்குவரத்து விதிமுறைகளை மீறி போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை செலுத்துதல் போன்ற விரும்பத்தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
எனவே உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரினார்.
Spread the love