201
நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என் . மணிவண்ணன் தலைமையில் சபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(24) மாலை நடைபெற்றது.
இக்கூட்ட அமர்வில் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 13 உறுப்பினர்கள் மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர். இதன்போது கூட்டத்திற்கு தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு உள்ளுராட்சி ஆணையாளர் அறிவித்ததோடு புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.
இந்நிலையில் மூவர் புதிய தவிசாளர் தெரிவிற்காக சபையில் உறுப்பினர்களினால் பிரேரிக்கப்பட்டனர். இதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பா அல்லது இரகசிய வாக்கெடுப்பா என சபையில் விடப்பட்டது.இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர்.இதற்கமைய உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட மூன்று புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.
இதன் போது நடைபெற்ற தேர்வில் வாக்குகளை குறைவாக பெற்ற புதிய தவிசாளர் தேர்வு உறுப்பினரான திருமேனி யோகநாதன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு ஏனைய இரு போட்டியாளர்களான தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அந்தோனி சுதர்சன் மற்றும் சிவலிங்கம் குணரட்னம் ஆகிய இருவரில் புதிய தவிசாளர் பதவிக்காக தெரிவு செய்வதற்கு மீண்டும் இரண்டாவதாக பகிரங்க வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளருக்கு சபையின் 13 உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 04 உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 02 உறுப்பினர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவருமாக 07 உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அந்தோனி சுதர்சனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
மற்றுமொரு புதிய தவிசாளர் தேர்வு உறுப்பினரான தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சிவலிங்கம் குணரட்னத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் என 04 பேர் வாக்களித்தனர். இத்தேர்வில் சுயேட்சைக்குழு மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணயின் உறுப்பினர் என 02 பேர் நடுநிலை வகித்திருந்தனர்.
இந்நிலையில் மூன்று மேலதிக வாக்குகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த அந்தோனி சுதர்சன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
மேற்குறித்த புதிய தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் நாகேந்திரன் தர்சினி பிரேரித்து முன்மொழிந்தது அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர் முருகப்பன் நிரோஜன் வழிமொழிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அந்தோனி சுதர்சன் 07 உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய தவிசாளராக தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love