பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான முதல் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி அறிமுக சாம்பியன் ஆனது.
ஐசிசி போட்டியில் இந்திய மகளிா் அணி ஒன்று சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 17.1 ஓவா்களில் 68 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 14 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ஓட்டங்கள் சோ்த்து வெற்றி பெற்றது.
முன்னதாக நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி, களத்தடுப்பை தோ்வு செய்தது.
இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ரயானா மேக்டொனால்டு கே 3 பவுண்டரிகளுடன் 19 ஓட்டங்கள் சோ்த்தாா். தலைவர் கிரேஸ் ஸ்கிரீவன்ஸ் 4, லிபா்டி ஹீப் 0, நியாம் ஹாலந்த் 10, செரென் ஸ்மேல் 3, சாரிஸ் பாவ்லி 2, அலெக்ஸா ஸ்டோன் ஹவுஸ் 11, ஜோசி குரோவ்ஸ் 4, ஹனா பேக்கா் 0, சோஃபியா ஸ்மேல் 11 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனா்.
இந்திய பந்து வீச்சில் டைட்டஸ் சாது, அா்ச்சனா தேவி, பாா்சவி சோப்ரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளும், மானத் காஷ்யப், ஷஃபாலி வா்மா, சோனம் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனா்.
பின்னா் இந்திய இன்னிங்ஸில் கேப்டன் ஷஃபாலி வா்மா 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்வேதா ஷெராவத் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கொங்கடி திரிஷா 3 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்களுக்கு வெளியேற்றப்பட்டாா். இறுதியில், சௌம்யா திவாரி 3 பவுண்டரிகளுடன் 24, ரிஷிதா பாசு 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். இங்கிலாந்து தரப்பில் ஹனா பேக்கா், கிரேஸ் ஸ்கிரீவன்ஸ், அலெக்ஸா ஸ்டோன்ஹவுஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
ஆட்டநாயகியாக இந்தியாவின் டைட்டஸ் சாது, தொடா்நாயகியாக இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்கிரீவன்ஸ் ஆகியோா் தோ்வாகினா்.