பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசியும் முழுவதுமான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்
- இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் பிரகாசமான பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கிறது.
- கொரோனா பேரிடரின் போது, 80 கோடி பேருக்கு 28 மாதங்கள் உணவு தானியங்களை இலவசமாக வழங்கி பட்டினியைத் தடுத்துள்ளோம்.
- உலகம் சவாலான சூழலை எதிர்கொண்டிருக்கும் சூழலில் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு இந்தியா வந்திருப்பது, உலக பொருளாதாரத்தில் இந்தியாவை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பை தந்துள்ளது.
- 2014-க்குப் பிறகு கடந்த 9 ஆண்டுகளாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் நாட்டின் தனி நபர் வருமானம் இரட்டிப்பாக ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. பொருளாதார வலிமை அடிப்படையில் 10வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- கொரோனா மற்றும் ரஷ்யா-யுக்ரேன் போர் எதிரொலியாக உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த போதே இந்தியா சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். முக்கியமான பெரிய நாடுகளில் இதுவே அதிக அளவாகும்.
- சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும்.
- வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் தொடங்க இளைஞர்களை ஊக்குவிக்க சிறப்பு வேளாண்மை நிதி உருவாக்கப்படும்.
2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம், நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 5-வது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். கடந்த இரு ஆண்டுகளைப் போல இதுவும் காகிதமில்லா வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது.
மக்களவையில் லேப்டாப் உதவியுடன் பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையாக முடித்ததும், பட்ஜெட் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். வரவு செலவுத் திட்ட மொபைல் அப்பை (Budget Mobile app) செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் வரவு செலவுத் திட்ட உரையை முழுமையாக பெறலாம்.
மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்ய தயாராகும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் கட்டமாக குடியரசுத் தலைவர் மாளிகை சென்று குடியரசுத் தலைவர் திரளவுபதி முர்முவை சந்தித்தார். அவருடன் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
நிதி அமைச்சகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு புறப்பட்ட போது பேசிய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் வரவு செலவுத் திட்டம் இருக்கும் என்று குறிப்பிட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த பட்ஜெட் 2024 பொதுத்தேர்தலுக்கு முந்தைய நரேந்திர மோதி அரசின் முழு பட்ஜெட்டாக இருந்தாலும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, அது எளிய மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 4-4.5 சதவிகிதம் இருந்த நிலையில், தற்போது 6.4 சதவிகிதமாக உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் இரண்டு மடங்காகியுள்ளதால், உணவு மற்றும் உரங்கள் மீதான மானியங்கள் நான்கில் ஒரு பங்காக குறைக்கப்படலாம் என்று ராய்ட்டர்ஸின் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது. கொரோனா கால இலவச உணவு திட்டத்தையும் அரசாங்கம் ஏற்கெனவே நிறுத்திவிட்டது.
அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதாவது ஏற்றுமதியில் இருந்து அரசாங்கம் ஈட்டும் வருவாய்க்கும் இறக்குமதியில் செலவழிக்கும் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், மற்றொரு சவாலாக உள்ளது.
பணப் பற்றாக்குறையை சிறப்பாக சமாளிக்க பட்ஜெட் அறிவிப்புகளைத் தாண்டி, தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
நன்றி -பி.பி.சியின் நேரடி செய்தி.