175
கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையத்தை கையளிக்கும் நிகழ்வு நாளைய தினம் சனிக்கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 75 ஆவது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் யாழ்ப்பாண கலாசார நிலையத்தை கையளிக்கும் இந் நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்க பிரதமர் தினேஸ் குணவர்த்தன, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இந்தியாவின் தகவல் – ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் கலாநிதி எல். முருகன், இலங்கையின் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
“யாழ்ப்பாண கலாசார நிலையம்” யாழ்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தில் இந்திய அரசாங்கத்தின் முற்றும் முழுதுமான நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப கட்டத்தில் இலங்கை – இந்திய அரசாங்கங்களுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், இதன் நிர்மாணப் பணிகளின் முடிவில் அதன் நிர்வாகத்துக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் கையளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் அதனை மத்திய புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு வந்தது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்வுக்கான சகல ஒழுங்குகளையும் புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு வடக்கு மாகாண சபையுடனேயே இணைந்து மேற்கொண்டுள்ளது.
Spread the love