ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற விரும்பிய அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற படகு ஒன்று லிபியா அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 73 போ் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் (யுஎன்எச்சிஆா்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிாிழந்தவா்களில் 11 பேரின் உடல்கள் லிபியாவின் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் உயிர் தப்பி கரைக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளைச் சோ்ந்த ஏராளமானவா்கள், ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அத்தகைய அகதிகளை சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து மையமாக லிபியா உருவாகி வருகிறது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இவ்வாறு மத்தியதரைக் கடல் வழியாக ஆபத்தான பயணத்தில் ஈடுபட்டு 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது