243
கல்குவாரியினால் உருவான நீர்தடாகத்தில் நீராடச்சென்று சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம்-1 கிராம சேவகர் பிரிவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை 5.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது
மூன்று சிறுவர்கள் சம்பவ இடமான கல்குவாரி பகுதியில் காணப்பட்ட நீர்தடாகத்தில் ( குட்டை) நீர் காணப்பட்டதால் குளிப்பதற்காக தயாராகியுள்ளனர். மரணமான சிறுவன் மற்ற இரு நண்பர்களையும் குளிப்பதற்காக அழைத்துள்ளாா். அவர்கள் மறுத்த நிலையில் குறித்த நீர்நிலையில் இருந்து சுமார் 11 அடி உயரமான மலையில் ஏறி மரணமடைந்த சிறுவன் முதலில் குறித்த நீர்நிலையில் பாய்ந்துள்ளார். குட்டையின் ஆழத்தினை அறியாமல் பாய்ந்த அச் சிறுவனை காணவில்லை என அவ்விடத்தில் நின்ற இரு சிறுவர்களும் அபயக்குரல் இட்டுள்ளனர்.
பின்னர் இறந்த சிறுவனின் உறவினர்கள் குட்டையில் இறங்கி தேடுதல் மேற்கொண்டு சகதியில் சிக்கிய நிலையில் சிறுவனை மீட்டு முதலுதவி வழங்கி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர்.
இவ்வாறு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட சிறுவன் மரணமடைந்த நிலையில் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் இன்று(27)மதியம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த கல்குவாரி குட்டை சுமார் 20 வருடங்களாக உபயோகிக்கப்படாமல் காணப்படுவதாகவும் சுமார் கிட்டத்தட்ட 30 அடி ஆழமாக உள்ளதாகவும் அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love