189
மனித பாவனைக்கு உதவாத பழப்புளியை மீள் பொதி குற்றச்சாட்டில் கைதான நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. கடந்த ஒக்டொபர் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள களஞ்சிய சாலை ஒன்றில் சுகாதாரமற்ற முறையில் பழப்புளி பொதி செய்யப்படுவதாக பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைத்த பொது சுகாதார பரிசோதகர் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்ட 6 ஆயிரம் கிலோ பழப்புளியை கைப்பற்றி இருந்தார்.
மறுநாள் 26ஆம் திகதி யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் கைப்பற்றப்பட்ட பழப்புளியையும் , அதனை உடைமையில் வைத்திருந்த நபரையும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரணை செய்த நீதவான் , புளியை உடைமையில் வைத்திருந்தவரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார். அத்துடன் கைப்பற்றப்பட்ட பழப்புளியை பரிசோதனைக்காக அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறும் கட்டளையிட்டார்.
இந்நிலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த சந்தேகநபர் கடுமையான நிபந்தனைகளுடன் 36 நாட்களின் பின்னர் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது. தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையிலும் , அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையில் பழப்புளி வண்டுகள் தாக்கி , மனித பாவனைக்கு உதவாதது என கிடைக்கப்பெற்றதை அடுத்து , புளியை உடைமையில் வைத்திருந்த நபரை குற்றவாளி என கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
Spread the love