கட்டாரின் பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளார்.. குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
56 வயதான நிஷங்க சில்வா என்பவா் உயிரிழந்துள்ளதுடன், 60 வயதான அப்துல் ரசாக் ஜமீல் என்பவர் காணாமல் போயுள்ளதாகவும் இருவரும் கட்டாருக்கு தொழிலுக்காக சென்று குறித்த கட்டடத்தில் தங்கியிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 12 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் 13,042 இலங்கையர்கள் கட்டாருக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது அங்கு தொழில் புரிந்து வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.