மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடா்பில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது முறைப்பாடு செய்திருந்தனா்.
இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததனையடுத்து மாணவிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் முறை்ப்பாடு செய்திருந்தார்.
இந்த முறை்ப்பாட்டின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
இதற்கிடையே பேராசிரியர் ஹரி பத்மன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றுவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பிய நிலையில் வடசென்னையில் நண்பர் ஒருவர் வீட்டில் வைத்து அவரை இன்று அதிகாலையில் காவல்துறையினா் கைது செய்தனர்.