சூடானுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் Aidan O’Hara அந்நாட்டு தலைநகர் ஹார்ட்டூமிலுள்ள(Khartoum) அவரது இல்லத்தில் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அயர்லாந்தைச் சேர்ந்த அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகவில்லை என அயர்லாந்து வௌிவிவகார அமைச்சர் மைக்கல் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலின் மூலம் இராஜதந்திரிகளைப் பாதுகாப்பதற்கான கடமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூடானில் அரச படைகள் மற்றும் துணை இராணுவப் படைகளுக்கு இடையில் உக்கிரமான மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக இடம்பெறும் மோதல்களில் 185 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1800 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
சூடான் தலைநகரில் வான் தாக்குதல்கள், குண்டுத் தாக்குதல்கள், கனரக மற்றும் சிறிய ஆயுத மோதல்கள் என்பன இடம்பெற்றுள்ளன.
தலைநகரின் முக்கிய பகுதிகள் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளும் உரிமை கோருகின்றமை குறிப்பிடத்தக்கது.