168
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்றில் காவல்துறையினரினால் அனுமதி கோரபட்ட வழக்கு எதிர்வரும் 4ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது .
அதேவேளை சிலையை அகற்ற வேண்டாம் என கோரி மன்றில் முன்னிலையான இந்து அமைப்புக்களின் சட்டத்தரணிகளுக்கு அன்றைய தினம் மன்றில் எழுத்து மூல சமர்ப்பணங்களை முன் வைக்குமாறு மன்று கூறியுள்ளது.
புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையினால் போக்குவரத்திற்கு இடையூறு எனவும் , மதங்களுக்கு இடையில் முரண்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உண்டு எனவும் அதனால் அந்த சிலையை அகற்ற நீதிமன்றில் அனுமதி கோரி இருந்தனர்.
அதனை அடுத்து நீதிமன்று , குறித்த சிலை தொடர்பில் உரிமை கோர கூடியவர்கள் எவரேனும் இருப்பின் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தது.
அதன் பிரகாரம் இன்றைய தினம் சிலை தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 30க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மன்றில் பிரசன்னம் ஆகினர்.
அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , மூத்த சட்டத்தரணிகளான என். ஸ்ரீகாந்தா , வி. திருக்குமரன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் மன்றில் தோன்றினர்.
நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதவான் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இந்து அமைப்புக்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் எழுத்துமூல சமர்ப்பணங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு பணித்தார்.
Spread the love