200
ஹர்த்தால் நடவடிக்கையை தொடர்ந்து வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவோம் என தமிழ் தேசிய கட்சி பிரதிநிதிகள் சிவில் செயல்பாட்டாளர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மண்ணைக்காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம் என துண்டுப்பிரசுரம் ஒன்றினை பொதுமக்களுக்கு விநியோகித்த பின்னர் வடக்கு கிழக்கில் ஹர்த்தால் செயல்பாட்டை முன்னெடுப்பது தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு தெளிவூட்டல் விசேட செய்தியாளர் சந்திப்பு கல்முனையில் திங்கட்கிழமை(24) இரவு நடைபெற்ற போது மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அங்கு கருத்து தெரிவித்த அவர்கள்
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற காட்டுமிராண்டிச் சட்டத்தால் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.அதே போன்று ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் அப்பாவி முஸ்லீம் மக்கள் இதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வாடுகின்றார்கள்.அரசிற்கு எதிராக போராடியவர்களும் இதே சட்டத்தினால் கைது செய்யப்பட்டனர்.
இப்பொழுது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயரில் முன்னரை விட மிக மோசமான சட்டம் வரவிருக்கின்றது.அது நிறைவேற்றப்பட்டால் பேச்சுரிமை எழுத்துரிமை ஜனநாயக போராட்டங்கள் ஊடகங்களின் குரல்கள் அனைத்தும் நசுக்கப்படும் என்ற அடிப்படை உரிமைகளை மறுக்கக்கூடிய சட்டத்தை வடக்கு கிழக்கு மக்கள் முற்றாக நிராகரிக்கின்றார்கள் என்பதை அரசுக்கு காட்டுவதற்கு இந்த ஹர்த்தாலை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழின அழிப்பினை காலங்காலமாக நிகழ்த்தி வருகின்ற பெரும்பான்மைச் சமூகம் தமிழர்களின் இருப்பையும் வாழ்வைiயும் கேள்விக்குறியாக்கியே வந்திருக்கிறது. அண்மைய காலங்களில் நடைபெற்று வருகின்ற அத்தனை சம்பவங்களும் இதனை மீண்டும்மீண்டும் உறுதி செய்கின்றன.
பயங்கரவாதத்தடைச் சட்டமே வேண்டாமென்கிற நிலையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை ஏற்படுத்துவதற்கு ஆட்சியாளர்கள் முனைந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சட்டத்தின் மூலமாக தமிழ் பேசும் மக்களின் அத்தனை உரிமைகளையும் பறித்தெடுக்கவே அரசு முடிவு செய்துள்ளது.
இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டமே நடைபெறவுள்ள ஹர்த்தாலாகும். இத் தினத்தில் சந்தைகளை மூடி கடைகளை அடைத்து போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஒத்துழையுங்கள். அத்தோடு அரச அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பணிப் புறக்கணிப்புகளை மேற்கொண்டு ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குங்கள் என தெரிவித்தனர்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழீழ விடுதலை இயக்க உப தலைவர் கென்றி மகேந்திரன், கல்முனை சிரேஸ்ட பிரஜைகள் குழுத் தலைவர் குஞ்சித் தம்பி ஏகாம்பரம் ,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமான கரன் என்றழைக்கப்ப்படும் சிவசுந்தரம் புன்னியநாதன், அம்பாறை மாவட்ட சமூக செயற்பாட்டாளர் ராஜகுமார் பிரகாஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சிரேஸ்ட உறுப்பினர் சற்குணம் என்றழைக்கபப்டும் கனகசபை சற்குணராஜா, சிற்பங்கள் அறக்கட்டளை உப தலைவர் நடராஸா சுரேஸ்ராஜா, ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love