228
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் வயோதிபப் பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய நபர் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
திருநெல்வேலியில் வயோதிப பெண்மணி வசிக்கும் வீடொன்றினுள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் , வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வீட்டினுள் உள்ள அறை ஒன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தியுள்ளார். அவ்வேளை அறையினுள் பூட்டப்பட்டு இருந்த பெண்மணி அபாய குரல் எழுப்பவே , அயலவர்கள் வீட்டிற்கு சென்ற போது , வீட்டினுள் இருந்து நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.
அதனை அடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போது வயோதிப பெண் அறை ஒன்றினுள் வைத்து பூட்டப்பட்டு இருப்பதனை அவதானித்து அறையை திறந்து அவரை காப்பாற்றியுள்ளனர். அதேவேளை வீட்டில் இருந்த பொருட்கள் கலையப்பட்டு காணப்பட்டன.
அதனை அடுத்து , வீட்டில் இருந்து தப்பி சென்ற நபரை ஊரவர்கள் தேடி மடக்கி பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போது , அந்நபரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது பையில் , பித்தளை பொருட்கள் சிலவும் காணப்பட்டுள்ளன. அதேவேளை குறித்த நபரிடம் தன்னை அடையாளப்படுத்த கூடிய எந்த ஆவணங்களும் இருக்கவில்லை.
அதனை அடுத்து கோப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கி , காவல்துறையினரிடம் அந்நபரை ஒப்படைத்துள்ளனர். அந்நபரை கைது செய்த கோப்பாய்காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு பகுதியில் வயோதிபர்கள் ஐவர் படுகொலை செய்யப்பட்டு , அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் , இந்த சம்பவம் குறித்த வீட்டின் அருகில் வசிக்கும் அயலவர்கள் மத்தியில் மேலும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Spread the love