வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.. அதேவேளை, எடுத்துச்சென்றுள்ள விக்கிரகங்களை ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறும் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய த்தில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்றைய தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், விக்கிரகங்கள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாரி மலையிலிருந்த திருவுருவ சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் ஆகியன காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சமர்பணங்களை ஆராய்ந்த வவுனியா நீதவான், வெடுக்குநாரி மலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஸ்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை ஆலய பரிபாலனசபையிடம் கையளிக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் திருவுருவச் சிலைகள் மீள பிரதிஸ்டை செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ள நீதவான் பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும், அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் காவல்துறையினருக்கு கட்டளையிட்டுள்ளாா்.
அத்துடன், வெடுக்குநாரி மலையிலிருந்த விக்கிரகங்கள் சேதப்படுத்தியமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதை துரிதப்படுத்துவதற்கும் காவல்துறையினருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.