187
யாழ்.புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் மூவர் அச்சுவேலி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் மூவரையும் பொலிஸார் முற்படுத்திய வேளை மூவரையும் எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
கடந்த 10ம் திகதி புத்தூர் சந்தியில், வைத்தியசாலைக்கு அருகில் தண்ணீர் பந்தல் அமைத்த இளைஞர்கள் ஒலி பெருக்கியை அதிக சத்தத்தில் ஒலிக்க விட்டுள்ளனர். இதனையடுத்து தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்திற்குச் சென்றிருந்த வைத்தியர் ஒலி பெருக்கியின் சத்தத்தை குறைக்கும்படி கேட்டுள்ளார். அதன் போது அங்கு தர்க்கம் ஏற்படவே , வைத்தியர் அங்கிருந்து வெளியேறி வைத்தியசாலைக்குள் சென்றுள்ளார்.
அதன் போது, வைத்தியசாலைக்குள் நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு அச்சுறுத்தலும் விடுத்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வைத்தியர் அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதேவேளை கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வைத்தியரால் அன்றைய தினமே முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் , காவல்துறையினர் விசாரணைகளில் அசமந்தம் காட்டியமையால் , வைத்தியசாலை வைத்திய உத்தியோகஸ்தர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கடமை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்த நிலையலையே காவல்துறையினர் தமது விசாரணைகளை தீவிரப்படுத்தி மூவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love