பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற பிணை வழங்கியுள்ளது இம்ரான் கான் அல் காதிர் அறக்கட்டளை வழக்கு தொடா்பாக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊ முன்னிலையாக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்திருந்தனா்.
அவரது கைதினைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. அத்துடன் நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று கூறியதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு இம்ரான் கான் முன்னிலையாக வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதன்படி இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அவா் முன்னிலையான போது அவரது பிணை மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால நிவாரணமாக, 2 வாரங்களுக்கு பிணை வழங்கியதுடன் அவரை கைது செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.