கம்பளை – வெலிகல்ல – எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 22 வயதான பாதிமா முனவர் என்ற யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. பேராதனை – கெலிஓய பகுதியிலுள்ள மருந்தகமொன்றில் பணிப்புரிந்து வந்துள்ள இந்த யுவதி கடந்த 7ம் திகதி முதல் காலை காணாமல் போயிருந்தார்.
தனது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், குறித்த யுவதி பயணிக்கும் தருணத்தில் அவருக்கு பின்னால் இளைஞன் ஒருவன் செல்லும் விதம் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஆடு வளர்ப்பில் ஈடுபடும் இளைஞன் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதனையடுத்து அவரது குடும்பத்தினர் கம்பளை காவல்நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்திருந்தனர்.
அதையடுத்து, காவல்துறையினா் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த பகுதியின் இரு புறத்திலும் உள்ள காட்டு பகுதிக்குள் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , எந்தவொரு தடயத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், யுவதிக்கு பின்னால் சென்ற குறித்த இளைஞன், கம்பளை காவல் நிலையத்தில் நேற்றைய தினம் சரணடைந்து யுவதியை தானே கொலை செய்து, புதைத்துள்ளதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து, குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினா் , சந்தேகநபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் காட்டுப் பகுதிக்குள் சடலம் புதைக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்களை கண்டுபிடித்தனர்.
மேலும் குறித்த யுவதியுடையது என சந்தேகிக்கப்படும் பாதணியொன்றும், தண்ணீர் போத்தல் ஒன்றும் அந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், நீதவான் முன்னிலையில் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்டு, யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் இந்த யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த வேளையில், அதனை நிராகரித்தமையினால் இந்த கொலையை செய்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளாா்.
இதேவேளை குறித்த சந்தேக நபர் சரணடைவதற்கு முன்னர் பிரதேச மக்களுக்கு அனுப்பியுள்ள வட்ஸ்அப் குரல் பதிவில் தான் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளமையே, இந்த கொலையை செய்வதற்கான காரணம் என தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது