பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக இந்தியாவின் பல மாநிலங்களில் 100 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் 6 மாநிலங்களில் 100 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு ஏஜென்சியான NIA அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகள், போதைப் பொருட்கள் கடத்தல் கும்பல், நிழல் உலக தாதாக்கள் ஆகிய கும்பல்களை சேர்ந்தவர்களின் இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உபி, உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் இந்த அதிரடி சோதனை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மோகாவில் ராஜேந்தர் நகரில் தொழிலதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தல்வாண்டி பங்கேரியா, தூர்கோட், நிதவாலா கிராமங்களில் நிழல் உலக தாதாக்களுக்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சார் மாவட்டத்தில் 2 இடங்களிலும் பெரோஸ்பூர் மாவட்டத்தில் 3 இடங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தில் சிர்சா, ஜஜ்ஜார், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குருகிராமில் தொழிலதிபர் வீடு ஒன்று என்.ஐ.ஏ. அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.