குடியேற்றத்தைத் தடுக்க புதிய விதிகள் அறிவிப்பு!
பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் வீஸா தொடர்பில் இறுக்கமான பல கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் அதிகரிக்கும் குடியேற்றத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்டு வருகின்ற கடுமையான திட்டங்களின் ஒரு பகுதியாகவே மாணவர் வீஸா மீதும் கடும் போக்கைக் கடைப்பிடிக்க பிரதமர் ரிஷி சுனாக்கின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் மாணவர் வீஸா தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை (23.05.23 வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் குடும்பத்தவர்களை அழைத்து அவர்களோடு இணைந்து கொள்வதை (family reunification for foreign students) பெருமளவில் கட்டுப்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்வதற்கு முன்பாகவே மாணவர் வீஸாவைத் (student visa) தொழில் வீஸாவாக (work visa) மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் வெகு விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறிகளை அனுப்பிவைப்பதற்கான ஒரு பயண வழியாக மாணவர் வீஸாவைப் பயன்படுத்துகின்ற சர்வதேச முகவர்களை இது கட்டுப்படுத்தும் என பிரித்தானிய குடிவரவு குடியகல்வுத் துறை கருதுகிறது. மாணவர் வீஸாவின் கீழ் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைகின்ற வாய்ப்பைக் குறைப்பதன் மூலம் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கின்ற குடியேறிகளின் நிகர எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க புதிய விதிகள் உதவும் என பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வரவுள்ள இந்தக் கட்டுப்பாடு பட்டப்படிப்புக்குப் பிந்திய ஆராய்ச்சிகளில்(postgraduate researchers) ஈடுபட்டிருக்கின்ற வெளிநாட்டு மாணவர்களுக்குப் பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் இணைந்து கல்வி கற்பதற்காக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மாணவர் வீஸா வசதிகளைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கின்றனர். இதில் பிரித்தானியாவில் குடியேற விரும்புபவர்களும் மாணவர் வீஸா வசதியைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர் நிலையில் உள்ள ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு வீஸா வழங்கப்பட்டிருப்பது பிரித்தானியாவின் குடிவரவு – குடியகல்வுப் பிரிவின் பதிவுகளில் தெரியவந்துள்ளது. 2019 இல் இந்த எண்ணிக்கை வெறும் 19 ஆயிரமாகவே இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.