சோடா போத்தல்களின் காலாவதி திகதியை மாற்றியமைத்து விநியோகித்த நிறுவனத்தின் வியாபார அனுமதி தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய கட்டளையிட்ட யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றம் விநியோகத்தருக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் தண்டம் விதித்து உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.. கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகரில் காலாவதித் திகதி மாற்றம் செய்யப்பட்ட குளிர்பான போத்தல்கள் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்த அவர், யாழ்ப்பாணம் மாநகர கடைகளில் பரிசோதனையை முன்னெடுத்தார்.
இதன்போது காலாவதி திகதியில் மாற்றம் செய்து மற்றும் திகதி காலாவதியான குளிர்பானப் போத்தல்கள் சுகாதார விதிமுறைகளை மீறி விநியோகிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது. இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட குளிர்பானப் போத்தல்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன.
அவற்றை விநியோகித்த விநியோக நிறுவனத்தின் களஞ்சியம் யாழ்ப்பாணம் வைமன் வீதியில் அமைந்துள்ளமையை அறிந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதனை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது காலாவதி திகதியில் மாற்றம் செய்த ஆயிரத்து 100 குளிர்பானப் போத்தல்கள் விநியோகத்திற்காக தயார் நிலையில் இருந்த போது கைப்பற்றப்பட்டன. அவற்றுக்கு மேலதிகமாக திகதி காலாவதியான குளிர்பான போத்தல்களும் என மொத்தம் ஆயிரத்து 710 மனித பாவனைக்கு உதவாத குளிர்பானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.
அதனை தொடர்ந்து, பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் விநியோக நிறுவனத்துக்கு எதிராக கடைகளில் கைப்பற்ற குளிர்பான போத்தல்களுக்காக இரண்டு வழக்குகளும் பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபனால் களஞ்சியசாலை குறைபாடுகளுக்காக ஓர் வழக்கும் என மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில், இன்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன் போது, 3 வழக்குகளிலும் குறித்த விநியோக நிறுவன உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டார். அதனை அடுத்து மூன்று குற்றங்களுக்கும் , ஒரு லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்றம், குறித்த விநியோக நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வியாபார அனுமதியை மீளாய்வு செய்யுமாறு 03 வழக்குகளிற்கும் தனித்தனியே யாழ்ப்பபாணம் மாநகர சபை ஆணையாளரிற்கு கட்டளை வழங்கியது.