காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் சமந்த பிரீத்தி குமார ஆயுதங்களால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளாா் என மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று(6) தீர்மானித்துள்ளது. மேலும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளாா்.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி, சமந்த பிரீத்தி குமார, நாரஹேன்பிட்டியில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து தனது நண்பருடன் மதிய உணவிற்காக அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்தார்.
அவரது நண்பர் உணவகத்திலேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சமந்த பிரீத்தி குமார தான் வாங்கிய உணவை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த போது, ஜீப்பில் வந்த சிலர் அவரை அழைத்துச்சென்றிருந்தனர். பின்னர் சமந்த பிரீத்தி குமாரவின் சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான விசாரணையின் போது, அந்த வலையமைப்பில் உயர் பதவி வகித்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் சமந்த பிரீத்தி குமார கைது செய்யப்பட்டதாகவும் இதன் போது அவாிடம் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் உள்ளவர்கள் தொடர்பில் வினவியபோது, போத்தல் ஒன்றை இரண்டாக உடைத்து சந்தேகநபர் காவல்துறையினா் மீது மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் காவல்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் , அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரத்தம் கசிந்து உயிரிழந்துள்ளமை இன்று நீதிமன்றில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது