407
இலங்கையின் சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியமைக்கு எதிராக காவல்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ். நீதிமன்றம், இன்றைய தினம் வழக்குக்கு சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
குறித்த வழக்கு கட்டளைக்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மட்டுமே மன்றில் சமூகமளித்திருந்தார்.
ஏனைய பிரதிவாதிகள் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கட்டளையை வழங்க முடியாதுள்ளதாக நீதவான் ஏ.ஆனந்தராஜா தெரிவித்ததோடு எதிர்வரும் தவணைக்கு வருகை தராத பிரதிவாதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணன்பவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர முன்னாள் மேயர் வி.மணிவண்ணன், மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Spread the love