ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக படை திரண்டு வந்த வாக்னர் குழு, தங்கள் கலகத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பதற்றத்தைத் தணிக்கும் வகையில், படை அணிவகுப்பை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் வாக்னர் குழுவின் முன்னேற்றத்தை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி சார்பாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேச்சுவார்த்தையில், வாக்னருடன் போர் நிறுத்தம் தொடர்பான முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் உருவான. ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக அச்சுறுத்தல் நடவடிக்கை வாக்னர் படை தொடங்கியதால் ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.
தற்போது வாக்னர் ஆயுதக் குழுவுக்கு ரஷ்ய அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், ரஷ்யா அரசுக்கு எதிராக வாக்னர் குழுவினர் திரும்பியுள்ளனர். ரஷ்ய ராணுவத் தலைமை அழிக்கப்படும் என்றும், தங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் துவம்சம் செய்யப்படும் என்றும் வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின் எச்சரித்திருந்தார்.
வாக்னர் குழுவினரின் எழுச்சியால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தலைநகர் மொஸ்கோ உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்னர் குழுவினர் மொஸ்கோ நகரை நோக்கி நெருங்கி வந்தனர்.
“மொஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசத்துரோகிகள் எனத் தெரிவித்துள்ள புட்டின் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்திவிட்டனர். ரஷ்யாவில் உள்நாட்டுப் போரை அனுமதிக்க முடியாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்திடம் சரண் அடைய கேட்டுக் கொள்வதாக புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.