தென்பசுபிக் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிற பிரான்ஸின் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் இடைநடுவில் இலங்கைக்கும் செல்கிறார் என எலிஸே மாளிகைச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்து சமுத்திரத் தீவாகிய இலங்கையில் பிரெஞ்சு ஜனாதிபதி ஒருவர் கால்பதிப்பது இதுவே முதல் முறை என பாரிஸ் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இருதரப்பு உறவுகளை ஆழமாக்குவதற்கும், இரு நாடுகளின் பிராந்திய மற்றும் சர்வதேச சவால்களை விவாதிக்கவும் இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் “-என்று எலிஸே மாளிகை தகவல்கள் கூறியுள்ளன.
நியூ கலிடோனியா, (New Caledonia) வானுவாட்டு(Vanuatu) பப்புவா நியூகினியா(Papua New Guinea) ஆகிய பசுபிக் தீவுகளுக்குச் சென்றிருந்த
ஜனாதிபதி மக்ரோன் பப்புவா நியூகினியாவில் இருந்து பாரிஸ் திரும்புகின்ற வழியில் கொழும்பில்
தரித்து நிற்கும் சமயத்தில் அந்நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திக்கவுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.
பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய கலிடோனியாவில் சில தினங்கள் தங்கியிருந்த அவர் இன்று வியாழக்கிழமை வானுவாட்டு செல்கிறார். பின்னர் பப்புவா நியூகினியா செல்லவுள்ள அவர், அங்கிருந்து திரும்பும் வழியில் பெரும்பாலும் நாளை வெள்ளிக் கிழமை கொழும்பைச் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. (மூலம் – தாஸ்நியூஸ் – பாரிஸ் )