இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 ஆம் திருத்தம் தொடர்பில் மீண்டும் மீண்டும் பேச அழைப்பது, வடக்கு கிழக்கு தமிழரை முட்டாள் ஆக்குவது மட்டுமல்லாது ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் அவர் மதிக்கத் தயார் இல்லை என்பதையே காட்டுகின்றது என தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் தரப்பினருக்கு இந்த செயற்பாடு நன்றாகவே தெரியும் எனினும் தமிழ் மக்களின் பேரம் பேசும் வாய்ப்பை இல்லாம் செய்து சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு முண்டு கொடுக்கின்ற செயலாகவே இருக்கின்றது உன்பதை தமிழ் மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ். கொக்குவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (03.08.23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவர்,
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக காட்டி தமிழ் மக்களை ஏமாற்றும் ரணில் விக்ரமசிங்கவின் மோசமான முகத்தை காட்டும் பல விடங்கள் இன்னும் அம்பலமாகவுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஒரு வருடமாக தீவகம் முழுதும் அரசாங்கம் தீவகம் முழுவதையும் ஒரு அதிகார சபைக்குள் கொண்டு வந்து தீவகத்திலிருக்கும் அனைத்து நிர்வாக பணிகளையும் கொழும்பால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செய்வதற்குரிய வகையிலான திட்டம் அமைச்சரவையில் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ரணில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட போதே குறித்த விடயம் தொடர்பில் ஒரு சில புத்தி ஜீவிகளைக்கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தேச சட்டம் மகாவலியை விடவும் மிக மோசமான முறையில் அமைந்திருக்கும் எனவும், முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் அமைவதோடு, அனைத்து செயற்பாடுகளும் கொழும்பில் இருந்தே கட்டுப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இந்த திட்டம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கு முண்டுகொடுக்கம் தமிழத் தரப்புக்களுக்கும் நன்றாகவே தெரியும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி தமிழ்த்தேசியம் பேசும், தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்பவற்றுக்கும் நன்றாகவே தெரிந்தும் அனைத்தையும் மூடி மறைத்து தமிழர்கள் மத்தியில் ரெணிலுக்கு வெள்ளையடிக்கும் மிக மோசமான செயற்பாட்டிற்கும் தீவகத்தை முற்று முழுதாக இழக்க வேண்டிய ஒரு நிலைக்கும் இவர்கள் துணை போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கு கடற் பகுதிகளையும் சிங்கள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, கடற்றொழில் செய்யவிடாது தடுத்ததோடு, தொழிலாளர்களை வெளிநாட்டிற்கு செல்ல வைக்கும் ஒரு நிலையையும் ஏற்படுத்தியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
13 ஆம் திருத்தத்தின் மூலம் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாக காட்டிக்கொண்டு சிங்கள மயமாக்கலை முன்னெடுத்து செல்கின்றனர் எனவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.