கருவறைக்குள் சிக்குண்ட மகவுகள்
குழந்தைகள் பிறப்பது
குழந்தைகள் பெற்றெடுப்பது
இயல்பானது
இயற்கையானது என்பது
மறக்கவைக்கப்பட்ட நவீனகாலத்தில்
வெட்டுக்கருவிகளுடன் நிபுணர்கள்
சீசரை கருவறையுள் இருந்து
மீட்டவரின் வாரிசுகள்
அடிமடியைக் “கீறிக்கிழித்தல்”
இயல்பாக நவீனமாக
துரிதப்படுத்தப்பட்ட பொறிமுறையாக…
குற்றவாளிகள்!
குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர்
ஆயிரமாயிரம் குழந்தைகளை
ஆண்டாண்டு காலமாகப்
பெற்றெடுத்த கரங்கொண்டோர்
ஆண்டாண்டு காலமாகப்
பெற்றெடுத்த கரங்கள்
அஞ்சிக் கிடக்கின்றன
கைவிலங்குகளுக்கு.
உருச்சிதைப்புச் செய்யப்பட்டனர்
முகம் மாற்றப்பட்டனர்
கீழ்நிலைப்படுத்தி
கையாட்களாக மாற்றப்பட்டனர்
நவீன அறிவொளியில்
காலாதிகாலப் பார்வையும் பயில்வும்
இழக்கவைக்கப்பட்டனர் மனிதர்.
நவீனத்தின் இருண்ட பக்கங்களுக்குள்
முடங்க வைக்கப்பட்டது
மரபுலகும் உள்ளுர் அறிவும்
மகபேற்றின் மனித இயல்பை
சட்டென கிழித்து மறைத்தது
நவீனகாலம்
விடுதலை
“முடி”களுக்கானது அல்ல
அடிமடி வெட்டி
விரும்பிய காலத்தில்
பிள்ளையை வெளியிறக்க
ஊசியில்லை மருந்தில்லை
கத்தி கொண்டு
காலத்தைக் கையிலெடுக்க
வழியில்லை
மகவுகள்
கருவறைக்குள் சிறைப்பட்டனர்
இயல்பை இயற்கையை
விட்டுவைக்காதது
வணிமகாகிய விஞ்ஞானம்
விதிவிலக்குகளை வழமையாக்கி
பெருக்கெடுக்கும்
விஞ்ஞான வணிகத்தில்
விபத்து
கருவறையுள் சிக்குண்டன
மகவுகள்.
வினைகின்றது தேகம்
விளையாடுகின்றது தேசம்
விடுதலை
“முடி”களுக்கானது அல்ல
சி.ஜெயசங்கர்.
“மக்கொலே”யின் பொம்மைகள்
அல்லது
எப்பொழுதும் அரைகம்பத்தில்
நச்சு இராசயனங்களில்
பழுக்க காய்ச்சி
காய்களைக் கனியாக்கும்
வணிகம்
சந்தைகளில் சந்திகளில்
சந்தைப்படுத்தல்கள்
அதீத இலாபக்கெடு
கனிகளை அன்றி
காய்கறிகளையும்
நஞ்சில் துவைத்து
நாசகாரம்
மனிதர்கள்
மற்றும் உயிர்களின்
சிதைவில்
சீறிச்சினந்த
கருநாகம் போல்
எகிறுகிறது
சந்தைப் பொருளாதாரம்
விண்ணரின் கைகளில்
வாலைக்கிளப்பி
பறப்புப் பறக்கிறது
வளர்ச்சிச் சுட்டி
மண்ணிறத்து மனிதர்
மக்கொலேயின் பொம்மைகள்
கழுத்தில் பட்டி கட்டி
மாநிறத்தார் தொனியில்
இன்னும் அதிகமாய்
எடுவை தொடுவையில்
மாறுபாடேதுமற்று
மக்கொலேயின் பொம்மைகள்
போதும் இனி
இவர்களே பார்த்துக் கொள்வர்
உறுதி செய்து
அவர்கள் போன
அந்நாளினை
நினைந்து
கையை விசிறி
நெற்றி முடக்கில்
நுனிவிரல்கள் குற்றி
விறைத்து நிற்க,
எதைத்தான்
ஏற்றினாலும் இறக்கினாலும்
ஆண்டையின் அடிமைகள்
அதிகாரம்
எங்கும் நஞ்சு எதிலும் நஞ்சு
எங்கும் அரைகம்பத்தில் எப்போதும் அரைகம்பத்தில்
சி.ஜெயசங்கர்.